தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு

0
51

யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது .

நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன.

அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன.

இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன.

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை.

வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.