இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மத்தியில் இலங்கையர்கள் பற்றிய அறிவிப்பு

0
75

நேற்றிரவு இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியான ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது, மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த தொடர் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து அந்நாட்டில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையர்கள் குழுவுடன் டுபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானம் தொடர்பான தகவல்களை அவர் விளக்கியுள்ளார்.

ஃப்ளை டுபாய்க்கு சொந்தமான FZ-1625 விமானம் நேற்றிரவு 20.10 மணியளவில் டெல் அவிவ் நோக்கி பயணித்த போது இந்த தாக்குதல் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், விமானத்தை திசை திருப்பி டுபாய்க்கு பறக்கவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி அந்த விமானத்தில் இஸ்ரேலுக்கு வரவிருந்த இலங்கையர்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நிமல் பண்டார கூறுகிறார்.

இதேவேளை, ஏப்ரல் 13ஆம் திகதி ஜெருசலேம் சன்கர் விளையாட்டரங்கில் சுமார் இரண்டாயிரம் இலங்கையர்களின் பங்குபற்றுதலுடன் வைபவம் இடம்பெற்றதாகவும் அதன் பின்னர் அவர்கள் தமது இல்லங்களுக்குச் சென்றதாகவும் இலங்கைத் தூதுவர் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தூதரகம் அவதானம் செலுத்தி வருவதாகவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையில், ஈரான் நேற்றிரவு இஸ்ரேல் மீது 500 க்கும் மேற்பட்ட ஆளில்ல விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்திய நிலையில் இதுவரை ஒரு சிறுமி மட்டுமே காயமடைந்ததாக அவர் கூறினார்.

அந்த அனைத்து வான்வழி தாக்குதல்களையும் அயர்ன் டோம் அமைப்பு  மூலம் அழித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதேவேளை, தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு ஜோர்தான், லெபனான், ஈராக், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு பயணிக்கும் விமானங்கள் அந்த வான்வழிகளை தவிர்த்து வேறு வான்வழிகளில் மீண்டும் ஐரோப்பாவின் பல நாடுகளுக்கு பயணிப்பதால் பயணங்களுக்கான நேரம் மற்றும் டிக்கெட் கட்டணமும் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு விமான டிக்கெட்டுகளை பெற்றுள்ளவர்கள் மீண்டும் அந்த டிக்கெட்டுகள் மீது கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையால், இஸ்ரேலில் இருந்து வரும் மற்றும் புறப்படும் விமானங்கள் தாமதமாகலாம் எனவும் நிமல் பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.