ராஜீவ் காந்தி கொலை வழக்கு; இலங்கை வந்த மூவருக்கும் கட்டுப்பாடுகள் விதிப்பு

0
47

இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டுடனேயே அனுப்பி வைக்கப்பட்டதாக தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களின் பின்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈழ தமிழர்கள் நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் சுமார் ஒன்றரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.

அவர்களில் சாந்தன் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து இருந்தார். ஏனைய நால்வரும் இலங்கைக்கு செல்வது தமக்கு பாதுகாப்பு இல்லை என கூறி தாம் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரி வந்திருந்தனர்.

அதற்கு இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை துணை தூதரகமும் அனைத்து நாடுகளுக்குமான கடவுசீட்டை வழங்க மறுத்தது.

இந்நிலையில் கடந்த மாதம் சாந்தன் உயிரிழந்தமையால் சிறப்பு முகாமில் இருந்த ஏனைய மூவரின் மனநிலை பாதிக்கப்பட்டது. அதனால் அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது.

சிறப்பு முகாமில் தொடர்ந்து இருந்தால் நாமும் உயிரிழந்து விடுவோம் என பயம் அவர்களிடம் ஏற்பட்டமையால் இலங்கை திரும்ப சம்மதித்தனர்.

இலங்கை திரும்ப யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்கு விமான சீட்டு எடுக்க முயன்ற வேளை “ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்” விமானம் மூலமே பயணிக்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

குறித்த விமானம் சென்னையில் இருந்து கொழும்புக்கே இருந்தமையால் அதில் பயணிக்க வேண்டி ஏற்பட்டது. அதேபோன்று சென்னை விமான நிலையில் வரையில் மூவருக்கும் பாதுகாப்பு வழங்கும் முகமாக அதிகாரிகள் செயற்பட்டனர்.

அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து இறங்கிய பின்னரே இறங்க வேண்டும் போன்ற சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. ஒருவரை நாடு கடத்தும் போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

புலனாய்வு பிரிவினர் விசாரணை

இலங்கை வந்து இறங்கியதும் அதிகாரிகள் இவர்கள் மூவரின் கடவுசீட்டையும் மூவரையும் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சுமார் 02 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறினீர்கள்? எதற்காக சென்ற நீங்கள்? எப்ப சென்ற நீங்க? போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு அவற்றை பதிவு செய்தனர். பின்னர் இவர்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறியமையால் இவர்களுக்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றில் தாம் வழக்கு தாக்கல் செய்ய போகிறோம் என தெரிவித்தனர்.

பிறகு உயர் அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடி இவர்களுக்கு எதிராக இலங்கையில் எந்த குற்றச்சாட்டு இல்லை என்பதாலும் 33 வருடங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் வெளியேறியமை தொடர்பில் வழக்கு தொடர்வதில் உள்ள சிக்கல் காரணமாகவும் வழக்கு தொடராது விட்டனர்.

சுங்க அதிகாரிகளின் விசாரணைகளின் போது மூவருடன் நானும் அருகில் இருந்தேன். அவர்களின் விசாரணை முடிவடைந்த பின்னர் புலனாய்வு பிரிவினர் அவர்களை பொறுப்பெடுத்து தமது விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது அவர்கள் மூவரையும் தாம் தனித்தனியாக விசாரணை செய்ய வேண்டும் என கூறி மூவரையும் தனித்தனியே அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் விடுவித்தனர் என மேலும் தெரிவித்தார்.