மியான்மரில் உள்ள இணையவழி குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதில் அரசாங்கம் காலதாமதம் செய்து வருவதாக அங்கு சிக்கியுள்ள இலங்கை இளைஞர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
உகாண்டா அரசாங்கம் தலையீடு செய்து அந்த முகாம்களில் இருந்த தங்களது நாட்டு பிரஜைகள் குழுவை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
மியான்மர் தாய்லாந்து எல்லைக்கு இடையில் பயங்கரவாத குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ‘சைபர் கிரிமினல் ஏரியா” எனப்படும் 3 முகாம்களில் 56 இலங்கையர்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் எமது செய்தி சேவை வெளிப்படுத்தியிருந்தது.
பயங்கரவாத வலையமைப்பினால் நடத்தப்படும் குறித்த முகாம்களில், இணையம் ஊடாக மக்களை ஏமாற்றி நிதி மோசடியில் அங்கு சிக்கியுள்ள இலங்கையர்கள் ஈடுபட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் எமது செய்தி சேவை வெளிப்படுத்தியதன் பின்னர் அரசாங்கம் தலையீடு செய்து குறித்த 56 இலங்கையர்களில் 8 பேர் மியன்மர் பாதுகாப்பு தரப்பினரால் மீட்கப்பட்டனர்.
எனினும் அவர்கள் இதுவரை இலங்கைக்கு திரும்பவில்லை.
இந்தநிலையில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த அங்கு சிக்கியுள்ள இலங்கையர் ஒருவர், தங்களுக்கு தொலைபேசி வசதிகள் எதுவும் இல்லை எனவும் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்து பணிக்கு அமர்த்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் தங்களுக்கு மின்சாரத்தின் ஊடாக தாக்குதல் நடத்தப்படுவதாகவும் உரிய வகையில் உணவுகள் வழங்கப்படுவதில்லை எனவும் அங்கு சிக்கியுள்ள இலங்கையர் குறிப்பிட்டார்.