இன்ஸ்டா காதலனை தேடி நேபாளத்திலிருந்து வந்த சிறுமி – மும்பையில் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

0
59

சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகரித்த பிறகு அதனை பயன்படுத்தி அதிக அளவில் மோசடிகளும் நடக்கிறது. முதியோர்கள், பெண்கள் இதில் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். சோசியல் மீடியா நண்பர்களை தேடி பெண்கள் தனியாக செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் மும்பை தாதர் ரயில் நிலையத்தில் மைனர் பெண் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் நின்று கொண்டிருந்தார். அவரின் நிலையை பார்த்த சக பயணிகள் இது குறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அப்பெண்ணை ரயில்வே போலீஸார் உடனே மீட்டு விசாரித்த போது அவரை அவரது இன்ஸ்டாகிராம் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தனியாக விட்டுச்சென்று சென்று இருப்பது தெரிய வந்தது.அப்பெண்ணை உடனே போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,” நேபாளத்தை சேர்ந்த 15 வயது மைனர் பெண்ணுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மும்பையை சேர்ந்த 22 வயது வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் போன் நம்பரை பகிர்ந்துகொண்டு அடிக்கடி பேசிக்கொண்டனர். மும்பை வாலிபர் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதற்காக மும்பை வரும்படி கேட்டுள்ளார். அப்படி மும்பை வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி இருக்கிறார். இதையடுத்து அப்பெண் கடந்த 17-ம் தேதி தனது பெற்றோரிடம் சொல்லாமல் வீட்டிலிருந்து புறப்பட்டு பஸ் மூலம் கோரக்பூர் வந்துள்ளார். அங்கிருந்து ரயில் மூலம் கல்யான் வந்துள்ளார். கல்யான் ரயில் நிலையத்தில் மும்பை வாலிபர் அப்பெண்ணை வரவேற்று மும்ப்ராவிற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே அவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார். அந்த வீட்டிற்கு அழைத்துச்சென்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ஒரு நாள் முழுக்க வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, திவா ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு அந்த வாலிபர் தப்பிச்சென்றுவிட்டார். அப்பெண் புறநகர் ரயில் மூலம் மும்பை தாதர் வந்துள்ளார். அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் வடாலாவில் இருப்பது தெரிய வந்தது. அவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளோம். அந்த நபர் தனது மொபைல் போனில் அப்பெண்ணுடன் செய்து கொண்ட அனைத்து சாட்டிங் விபரங்களையும் நீக்கி இருந்தார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மைனர் பெண்ணின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மைனர் பெண்ணின் பெற்றோர் இந்தியவர்கள் ஆவர். அவர்கள் தற்போது நேபாளத்தில் இருக்கின்றனர்” என்றார்.