வாகன விபத்து  காப்புறுதி இழப்பீட்டை பெறும் முறை புதுப்பிப்பு

0
62

வாகன விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாம் தரப்பினருக்கு நீதிமன்ற நடவடிக்கையின்றி இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் மார்ச் 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கும் காப்புறுதி நிறுவனங்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொடர் கலந்துரையாடலின் பலனாக நீதிமன்ற நடவடிக்கையின்றி விரைவாக இழப்பீடு வழங்கும் வேலைத் திட்டம் மார்ச் 1 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1 ஆம் திகதிக்கு பின்னரான விபத்துக்கள் தொடர்பில் மாத்திரமே இத்திட்டம் செயற்படுத்தப்படும்.

விபத்து இடம்பெற்று ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனத்தின் எந்தவொரு கிளையிலிருந்தும் அதிகபட்சமாக 05 இலட்சம் ரூபா வரையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.

மாறாக பாதிக்கப்பட்டவர் மேலதிகமான இழப்பீட்டுத் தொகையை பெற எதிர்பார்க்கும் பட்சத்தில் அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை நாட வேண்டும்.

இந்த நடவடிக்கை குறித்து இலங்கை பொலிஸார் மற்றும் பிரதேச செயலாளர்கள் கிராம சேவை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் தேவைப்படும் வெளிநாட்டவர்கள் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் விமான நிலையத்தில் விண்ணப்பித்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.