குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

0
60
இன்றைய சூழலில் எம்மில் பலரும் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று அவர்களுடைய குரலின் ஒலி அளவு குறைந்து விடும். வேறு சிலருக்கு குரல் தடைபட்டு விடும். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் லாரங்கிடிஸ் எனப்படும் குரல்வளை வீக்க பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கருதி, உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

எம்முடைய தொண்டை பகுதியில் குரல்வளை அமையப்பெற்றிருக்கிறது. இதில் குரல் நாண்கள், தசை, குறுத்தலும்பு ஆகியவை உள்ளடக்கிய சளி சவ்வின் மடிப்புகள் இடம்பெற்றிருக்கிறது. இவை உங்களது குரல் நாணை சீராக திறந்து மூடி, அதனுடைய இயக்கம் மற்றும் அதிர்வு காரணமாக ஒலி அலைகளை உண்டாக்கி, அதனை நாக்கு , உதடு போன்றவற்றால் தடையை ஏற்படுத்தி வார்த்தைகளாக வடிவமைக்கிறது. இந்நிலையில் சிலருக்கு வைரஸ் தொற்று காரணமாக குரல்வளையில் வீக்க பாதிப்பு ஏற்படுகிறது. இதன்போது பெரும்பாலானவர்களுக்கு குரல் நாண்கள் வீக்கம் அடைந்து பாதிப்பை உண்டாக்குகிறது. இவற்றின் பாதிப்பு இரண்டு வார காலகட்டத்திற்கும் மேலாக நீடித்தால்.. உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறவேண்டியதிருக்கும்.

குரல் தடை,  பேசும்போது எழும் குரலொலியின் அளவு குறைதல், தொண்டையில் அசௌகரியமான உணர்வு உண்டாகுதல், தொண்டை வலி, தொடர் வறட்டு இருமல் ஆகிய அறிகுறிகள் இருந்தால்.. உங்களுடைய குரல்வளை வீக்கமடைந்து பாதிக்கப்பட்டிருக்கும். உடனடியாக மருத்துவரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க வேண்டும்.

இதன்போது மருத்துவர்கள் லாரியங்காஸ்கோப்பி எனும் பிரத்யேக கருவி மூலம் உங்களது குரல்வளை வீக்க பாதிப்பை அளவிடக்கூடும். வேறு சிலருக்கு இத்தகைய பரிசோதனையுடன் திசு பரிசோதனையும் மேற்கொள்ள பரிந்துரைப்பர். பரிசோதனைகளின் முடிவுகளைப் பொறுத்து அதற்கான சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது. இதன் போது நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணம் வழங்கப்படுகிறது. சிலருக்கு ஸ்டீராய்டு மருந்துகள் மூலம் நிவாரணம் அளிப்பர். சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறைகளை உறுதியாக பின்பற்றினால் இத்தகைய பாதிப்பிலிருந்து விரைவில் மீளலாம்