ஐ.நா. இனியும் இலங்கையை நம்பக் கூடாது: ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்காது – சிங்களத் தலைவர்கள் இனவாதிகள்

0
84

சர்வதேசத்துக்கு இலங்கை அளிக்கும் எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றப்படுவதில்லை. ஒன்பது ஆண்டுகள் கடந்தும் ஐ.நா. தீர்மானம் கிடப்பில் கிடப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த முதலாம் திகதி இலங்கைத் தொடர்பான வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையில் பொறுப்புக்கூறல், நிலைமாறுகால நீதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் எடுத்துரைத்திருந்தார்.

2015ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஏற்று அதனை இலங்கை நடைமுறைப்படுத்தும் என அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு நடந்தது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் அப்போது பிரதமராக இருந்தார். ஆனால் ஒன்பது ஆண்டுகள் கடந்தும் அளித்த வாக்குறுதிகள் எதனையும் இலங்கை நிறைவேற்றவில்லை.

இலங்கையில் வாய் வாக்குறுதிகளாக அளிக்கப்படும் எந்தவொரு விடயமும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதை பன்நாட்டு சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கடந்த 80 வருடங்களாக தமிழர்கள் இந்த மண்ணில் ஏமாற்றப்படுகின்றனர். அவர்கள் வெளிப்படுத்தும் உள்ளக் குமுறல்கள்தான் சம்பவங்களாக மாறியிருக்கின்றன.

தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு நடந்தது என்றும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதையும் ஏற்றுக்கொண்டு மன்னிப்புகோரும் தலைவர் இல்லாத நாடாகவே இலங்கை உள்ளது.

இனவாத சிந்தனைக்குள் வழிநடத்தி செல்கின்றனர்

அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது உள்ளதால் ஐ.நாவும் அதனுடன் இணைந்த நிறுவனங்களும் இலங்கையை தொடர்ந்தும் நம்பி ஏமாறக்கூடாது.

இந்த விடயத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். தமிழ் மக்களுக்கு இடம்பெற்றது ஒரு இன அழிப்புதான் என்பதற்காக ஒரு நீதியான விசாரணை அவசியமாகும்.

சிங்கள மக்கள் இலங்கைத் தீவில் உள்ள பிரச்சினைகள் குறித்து விழிப்புணர் அடைந்துள்ளனர். ஆனால் சிங்களத் தலைவர்கள் இனவாதப் போக்கில் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ள மக்களை இனவாத சிந்தனைக்குள் வழிநடத்தி செல்கின்றனர்.

தமிழ் மக்கள் இழக்க வேண்டிய அனைத்தையும் இழந்துவிட்டனர். இலங்கை நீதியை தராது என்பதற்காக தமிழர்கள் சர்வதேச நீதியை நாடுகின்றனர். இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது சர்வதேச நாடுகளின் தலையீடு அவசியமாகும்.” என்றார்.