‘சாணக்கியன் புலி’ என்றார் ரோஹித – சபையில் கடும் வாய்த்தர்க்கம்: சிங்களப் பிரதமரை எப்படி சந்திக்க முடியும் என்றும் கேள்வி

0
76

ஆளுங்கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் ஆகிய இருவரும் நாடாளுமன்றத்தில் கடும் வாய்த்தர்க்கம் புரிந்தனர்.

இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சபை அமர்வில் இந்த சர்ச்சை ஏற்பட்டது. சாணக்கியனை பார்த்து புலி உறுப்பினர் என ரோஹித அபேகுணவர்தன நேற்றுமுன்தினம் அமர்வின் போது கூறியிருந்தார்.

மக்களை முட்டாள்களாக்க முற்படுகின்றனர்

இது தொடர்பாக சாணக்கியன் சபாநாயகரிடம் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய போதே வாய்த்தர்க்கம் எழுந்தது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, நேற்று முன்தினம் தாயகம் திரும்பியிருந்தார்.

பசிலை வரவேற்க பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் கடுநாயக்க விமான நிலையத்தில் குழுமியிருந்தனர். ரோஹித அபேகுணவர்தனவும் அங்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குள் தள்ளியவரை வரவேற்றக ரோஹித்த அபேகுணவர்தன உள்ளிட்டவர்கள் சென்றுள்ளனர்.

இவர்கள் மீண்டும் மக்களை முட்டாள்களாக்க முற்படுகின்றனர் என விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இதற்கு பதிலளித்த ரோஹித அபேகுணவர்தன, சாணக்கியனை ஒரு புலி, சாணக்கியன் விடுதலைகளின் உறுப்பினர் என கடுமையான தொனியில் விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த ரோஹித்த அபேகுணவர்தன,

”நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி உரையாற்றாது நாடாளுமன்றத்துக்கு வெளியில் உரையாற்றுமாறு சவால் விடுக்கிறேன்.

நான் அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை. தமிழ் உறுப்பினர்களுடன் கடந்த காலத்தில் நாம் எவ்வாறு பணியாற்றியிருந்தோம் எனவும் தெரியும். மக்களின் பிரச்சினையைதான் இங்கு பேச வேண்டும். தமக்கு பயன் கிடைக்கும் விடயங்களை மாத்திரம் பேசக் கூடாது.” என்றார்.

இதற்கு பதிலளித்த சாணக்கியன்,

புலி என என்னை விமர்சித்திருந்த ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு சென்ற போது என்னை தாக்க முற்பட்டிருந்தார்

உயிருக்கு உத்தரவாதம் இல்லை

என்னை அவர் அச்சுறுத்தியதோடு நீங்கள் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரை சந்திக்கலாம். அவர் சிங்கள மக்களுக்கான பிரதமர் எனக் கூறி தாக்க முற்பட்டார்.

இதற்கு பிரமதரின் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் அசோக பிரியந்த, ஜகத் பிரியங்கர ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சாட்சியாகும்.

இது மிகவும் பாரதூரமான விடயம். எனக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் குறித்து நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

இவ்வாறான இனவாதிகள் நாட்டில் இருக்கும் வரை எவ்வாறு எமது மக்களுக்கான நீதி கிடைக்கும். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு உத்தரவாதம் இந்த நாட்டில் இல்லை.” என அவர் சுட்டிக்காட்டினார்.