நடிகர் வடிவேலு அரசியலில் குதிக்கிறாரா?: காட்டுத்தீ போல் பரவிய செய்திக்கு பதில்; நெருப்பில்லாமல் புகையுமா?

0
99

நடிகர் வடிவேலு அரசியலில் களமிறங்கப்போவதாக கடந்த சில நாட்களாகவே தகவல் ஒன்று காட்டுத்தீ போல் பரவி வந்தது. அதாவது நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று கூறப்பட்டது.

இந்தத் தகவல் உண்மையா இல்லையா என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பியிருந்த சூழலில் வடிவேலு இப்போது அதற்கு விளக்கமளித்திருக்கிறார்.

சர்ச்சைக்கு விளக்கம்

இது குறித்து அவர் கூறுகையில், “நான் தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான தகவலில் துளியும் உண்மையில்லை. நான் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் வடிவேலு ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

வடிவேலுவின் முக பாவனை போதும் சிறு குழந்தை கூட விழுந்து விழுந்து சிரிக்கும். இப்படியான சூழலில் சில பிரச்சினைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

சினிமாவில் அசுர வளர்ச்சி

சில வருடங்களுக்கு முன்னர் அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 என அடுத்தடுத்த படங்கள் வெளியாகியது. குறிப்பாக அவர் நடித்த மாமன்னன் நகைச்சுவையை தாண்டி அவருக்குள் இருக்கும் உலக மகா நடிகனை வேறு ஒரு கோணத்தில் காட்டியது.

தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நிலையில், அரசியலில் களமிறங்கவுள்ளதாக வதந்திகள் பரவியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் நான் களமிறங்க வில்லை என்று அவரே விளக்கமளித்திருக்கும் நிலையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நெருப்பில்லாமல் புகையுமா?

எனினும், திமுகவில் திரை உலக நடிகர்கள் காலந்தோறும் உச்சம் பெறுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. டி.ராஜேந்தரில் தொடங்கி ராதாரவி, வாகை சந்திரசேகர், எஸ்.எஸ்.சந்திரன், தியாகு, நடிகை ராதிகா, நடிகர் சரத்குமார் என பெரும் பட்டாளமே திமுகவில் இருந்த காலமும் இருந்தது.

அது மட்டும் இல்லை, திரை உலகத்தினர் திமுகவில் இணைந்து இன்றும் பணியாற்றுகின்றனர். இதனால் வடிவேலுவை திமுக வேட்பாளராகவோ, பிரசார பீரங்கியாகவோ பயன்படுத்தினாலும் ஆச்சரியமில்லை என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.