மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உண்மைகளை முன்வைக்குமாறு மத்திய வங்கியின் தலைவர்களுக்கு அமைச்சரவை அறிவித்துள்ளது.
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரித்தமை தொடர்பில் மத்திய வங்கியின் பிரதானிகளுக்கு அமைச்சரவை இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரித்தமை தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்பு விவகாரம்
குறித்த சம்பள அதிகரிப்பு விவகாரத்திற்கு அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஜனாதிபதியும் தனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், சம்பள அதிகரிப்பு தொடர்பான உத்தரவுகளை வழங்குவதற்கு நிதியமைச்சர் மற்றும் அமைச்சரவைக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லாததால், இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு மத்திய வங்கியின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக இன்று காலை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு மத்திய வங்கியின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.