கண்ணீருடன் சாந்தனை வரவேற்ற கிளிநொச்சி; தேசிய உணர்வுக் கொடியை போர்த்தி மரியாதை

0
93

கிளிநொச்சியில் சாந்தனின் பூதவுடலுக்கு உணர்வுபூர்வ ரீதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சாந்தனின் பூதவுடலை ஏ9 வீதியிலிருந்து அஞ்சலி மண்டபம் வரையில் மக்களால் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி நிகழ்வுக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் பூதவுடல் வைக்கப்பட்டது.

இதன்போது மூத்த போராளி காக்கா ஈகைச் சுடரை ஏற்றியதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தேசிய உணர்வுக் கொடியை போர்த்தி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருவதுடன் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

வவுனியாவில் சாந்தனின் பூதவுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த பொலிஸார்; சாரதியை கைது செய்ய முயற்சி

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் சாந்தனின் பூதவுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த போக்குவரத்து பொலிஸார் சாரதியையும் கைது செய்ய முயற்சித்தமையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தினை சாந்தனின் பூதவுடல் தாங்கிய ஊர்தி நுழைந்தவுடன் ஊர்தி தரித்து நின்ற இடத்தில் வாகனத்தை நிறுத்த தடை மீறி நிறுத்தும் பட்சத்தில் ஊர்தியின் சாரதி கைதுசெய்யப்படுவார் எனவும் வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி எச்சரித்தார்.

இதனையடுத்து குறித்த பகுதியில் பதற்றநிலைமை உருவானது. பின்னர் நிலைமை சீர்செய்யப்பட்டது. மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மாங்குளத்தில் சாந்தனின் பூதவுடலுக்கு மக்கள் பெருமளவில் அஞ்சலி; உணர்வெழுச்சியுடன் கிளிநொச்சி நோக்கி நகரும் இறுதி ஊர்வலம்

சாந்தனின் பூதவுடல் மாங்குளம் பிரதேசத்தை சென்றடைந்தது. பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர். இதனைதொடர்ந்து சற்றுமுன்னர் சாந்தனின் பூதவுடல் அடங்கிய ஊர்தி கிளிநொச்சி நோக்கி நகர்கிறது.

வவுனியாவில் சாந்தனின் பூதவுடல்; மக்கள் பெருமளவில் திரண்டு அஞ்சலி

இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் வைக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு மாங்குளத்திலும் காலை 10.30 இற்கு கிளிநொச்சியிலும் தொடர்ந்து 11.30 இற்கு இத்தாவில் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு கொடிகாமம் ஊடாக பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் 2 மணிமுதல் வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இதேவேளை சாந்தனின் இறுதிக்கிரியை நாளை காலை 10 மணிக்கு அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டியில் இடம்பெறவுள்ளது. இந்த இறுதி கிரியையில் உறவினர்கள் ஊர் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு இடமளிக்குமாறு குடும்பத்தார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இன்றைய தினத்தினை தமிழ் தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.