இராணுவத்தினர் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியமைக்கு சுகாஷ் கண்டனம்

0
74

யாழ்ப்பாணத்தின் பலாலி, வயாவிளானில் ஊடகப் பணிக்காகச் சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, அராஜகம் புரிந்த இலங்கைப் படையினரின் செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஊடகவியவாளர்களின் புகைப்படக் கருவிகளைப் பறித்து, ஒளிப்பதிவுகளை அழித்து இலங்கைப் படையினர் அராஜகம் புரிந்த சம்பம் தொடர்பிலேயே இன்று (25.02.2024) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடக்குமுறை

அதில் மேலும், பேனா முனையை ஆயுத முனையால் அடக்க முற்படுவது கோழைத்தனத்தினதும் அடக்குமுறை மனோபாவத்தினதும் வெளிப்பாடே.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை மீதான அடக்குமுறை, இலங்கையில் ஜனநாயகம் என்ற கட்டடம் முற்றாகத் தகர்ந்து விட்டதையே மீண்டுமொரு தடவை உறுதிப்படுத்தி நிற்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஆரம்பமாகும் இந்த தருணத்தில் அரங்கேற்றப்பட்ட வன்முறையானது, சர்வதேசத்திற்குப் பல செய்திகளைப் பட்டவர்த்தனமாக்குகின்றது என்பதை வலியுறுத்துவதோடு, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் சுயாதீன செயற்பாட்டையும் உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கோருகின்றோம்.

இந்நிலையில், அச்சுறுத்தப்பட்ட ஊடக உறவுகளுக்கு எமது ஆதரவுக் கரங்களை நீட்டுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.