அமெரிக்காவின் டெக்சஸைச் சேர்ந்த ‘இன்டியூட்டிவ் மெஷின்ஸ்’ எனும் தனியார் நிறுவனம் தயாரித்து அனுப்பிய விண்கலம், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியுள்ளது.
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. 50 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்க விண்கலம் ஒன்று நிலவில் மீண்டும் தரையிறங்கியுள்ளது.
‘அடிசியஸ்’ என்றழைக்கப்படும் நிலவில் தரையிறங்கிய (லேண்டர்) விண்கலக் கருவி இலங்கை நேரப்படி பிப்ரவரி 23ஆம் திகதி காலை 5.23 மணிக்கு இந்த மைல்கல்லை எட்டியது. நிறுவனமும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
தானியக்க முறையில் ‘லேண்டர்’ தரையிறங்கும் முயற்சியில் இடையூறுகள் வந்தபோது பூமியிலிருந்து கிட்டத்தட்ட 384, 000 கிலோமீட்டர் தொலைவில் இருந்த அக்கருவியை அமெரிக்காவிலிருந்து பொறியாளர்கள் முழுமூச்சுடன் செயல்பட்டு மீண்டும் வெற்றிப்பாதையில் செலுத்தினர்.
அமெரிக்கத் தரப்பிலிருந்து ஆகக் கடைசியாக 1972ல் அமெரிக்காவின் அப்போலோ 17 விண்கலம் நிலவில் கால்பதித்தது. ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் நிலவிற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பியுள்ளன. ஆனால் மனிதர்களை நிலவிற்கு அனுப்பிய பெருமை அமெரிக்காவையே சாரும்.
நிலவின் தென்துருவத்துக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு இந்தியாவாகும். சந்திரயான்-3 கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் தரையிறக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.