மனைவி விவாகரத்து கேட்டதால் தானம் கொடுத்த கிட்னியை திருப்பிக்கேட்ட கணவர்; நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு

0
100

அமெரிக்காவில் மனைவி விவாகரத்து கேட்டதால், தான் தானமாக வழங்கிய சிறுநீரகத்தை திரும்ப வழங்குமாறு கோரி கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் பட்டிஸ்டா என்ற மருத்துவர் கடந்த 1990ம் ஆண்டு மருத்துவரான டோமினிக் பார்பரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2000வது ஆண்டு பார்பராவிற்கு சிறுநீரகங்கள் செயல் இழந்தது. இதையடுத்து அவருக்கு இரண்டு முறை செய்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தோல்வியில் முடிவடைந்தது.

மனைவிக்கு தானமாக வழங்கிய கிட்னி

இந்நிலையில் 3வது முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். உடனடியாக வேறு சிறுநீரகம் கிடைக்காததால் ரிச்சர்ட் தனது மனைவிக்கு தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து கார்னல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கடந்த 2001ம் ஆண்டு ரிச்சர்ட்டின் சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு, பார்பராவுக்கு பொருத்தப்பட்டது.

அதன்பின்னர் கடந்த 2009ம் ஆண்டு தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து பார்பரா தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கார்னல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரிச்சர்ட், தனது மனைவி விவாகரத்துக்கு கோருவதால் அவருக்கு விவாகரத்து அளிக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் தீர்ப்பு

ஆனால் அவருக்கு விவாகரத்து வழங்குவதென்றால் தான் தானமாக வழங்கிய சிறுநீரகத்தை தனக்கு திரும்ப வழங்க வேண்டும் என அவர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார். இல்லை என்றால் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக தனக்கு வழங்க வேண்டும் என அவர் அவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (19) தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி அமெரிக்காவில் உறுப்பு தானத்திற்காக நிலுவையில் உள்ள சட்டங்களின்படி ஒருவர் மற்றொருவருக்கு உடல் உறுப்புகளை தானமாக மட்டுமே வழங்க முடியும்.

அதற்காக இழப்பீடு தொகை அல்லது அந்த உறுப்புகளுக்கான தொகையை நிர்ணயித்து பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ரிச்சர்ட் தனது மனைவிக்கு சிறுநீரகம் வழங்கியது தானம் தானே தவிர அதற்காக இழப்பீடு தொகை நிர்ணயிக்க முடியாது எனக் கூறி ரிச்சர்ட்டின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.