ரணிலிடம் தமிழ் எம்பிக்கள் நிதி கோரல்: போட்டு உடைத்த டக்ளஸ்

0
206

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கி தருமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்ட முன்மொழிவுகள் உள்ளடக்கிய கோரிக்கையை அனுப்பியுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்ததாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம்(16.02.2024) மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடல் இடம்பெற்றது.

நிதி ஒதுக்கீடு
இதன்போது இவ்வருடம் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் உள்ள ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் திட்டங்களை எவ்வாறு தயாரித்து நிறைவு செய்தீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கேள்வி எழுப்பிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை பார்த்து நீங்கள் ஜனாதிபதியிடம் அபிவிருத்தி நிதி கேட்கவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், நான் ஜனாதிபதிக்கு நேரடியாக கடிதம் அனுப்பவில்லை யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு திட்டங்கள் தொடர்பாகக் கடிதம் அனுப்பினேன் அவர் அனுப்பி விட்டதாக எனக்கு தெரியப்படுத்தினார் என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சுற்றறிக்கையில் கூறப்பட்டதற்கிணங்க யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாக கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் விருப்புக்கேற்ப அபிவிருத்தி திட்டங்கள் முன்மொழியப்பட்டு தெரிவுகள் திரட்டப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச அபிவிருத்திக் கலந்துரையாடலில் தமது பிரதிநிதிகளை அனுப்பிவிட்டு தற்போது திட்டங்கள் தொடர்பில் தம்முடன் கலந்துரையாடவில்லை என கூற முடியாது.

மேலும் கடந்த மூன்று வருடங்களாக பன்முகப்படுத்தப்பட்ட நிதி மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படடாத நிலை இருந்தபோதும் இம்முறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாண மாவட்டத்திற்கென 322 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.

ஆனாலும் இந்த நிதி மிக சொற்பமானதாகவே உள்ளது.அதாவது சிறு விடயங்களை மேற்கொள்வதற்கான நிதியாகவே உள்ளது. அதற்கிணங்கவே இம்முறை பிரதேச செயலகங்களால் கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு அப்பிரதேச மக்களின் நேரடி தெரிவுகளாக திட்டங்களும் முன்மொழிவுகளும் திரட்டப்பட்டுள்ளது.

அபிவிருத்திக்கான நிதி
மேலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஜனாதிபதியுடன் நேரடியாக தொடர்புகளை பேணி வருபவர்கள் அவர்கள் நேரடியாக ஜனாதிபதியிடம் அபிவிருத்திக்காக நிதி கேட்டுள்ளார்கள் அவர்களின் தனிப்பட்ட ஒதுக்கீட்டில் நான் தலையிடப் போவதில்லை” என்றார்.

இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன், “பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடல்களுக்கு முதல் நாள் எமக்கு அறிவிக்கப்படுகிறது. சுற்று நிருபத்தின் பிரகாரம் 14 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது.

ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் இம்முறை எல்லாம் மாற்றமாகவே இடம்பெருகிறது. மாவட்ட அபிவிருத்தி குழு நிர்வாக விடையங்களுக்கு அரச அதிபர் தான் பொறுப்பு என்றால் கூட்ட ஒழுங்கு தெரிந்திருக்க வேண்டுமென கூறியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உங்கள் அபிவிருத்தி முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்காக ஒரு வார கால அவகாசத்தை என்னால் வழங்க முடியும் ஆனால் ஜனாதிபதி செயலகத்துடன் பேசிய பின்னரே உறுதியாக கூற முடியும் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், அபிவிருத்தி குழு தலைவர் நீங்கள் நீங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்தால் ஜனாதிபதி செயலகம் ஏற்றுக்கொள்ளும் ஆகையால் நல்ல ஒரு தீர்மானத்தை எடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகளையும் உள்ளடக்கி அனுப்புங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது மீண்டும் ஞாபகப்படுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீங்கள் எல்லோரும் ஜனாதிபதியுடன் நல்ல உறவில் இருக்கிறீர்கள் இயன்றவரை நிதிகளைப் பெற்று அபிவிருத்திகளை செயல்படுத்துங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.