சூழ்ச்சிகள் வெற்றியளிக்காது: இம்ரான் கானை இலங்கைத் தலைவர்களுடன் ஒப்பிட்ட சாலிய பீரிஸ்

0
131

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, கூட்டணி ஆட்சி அமைக்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கு பாகிஸ்தான் இராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 8ஆம் திகதி நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி கடந்த 10ஆம் திகதி தொடங்கியது. ஆனால் நேற்றுதான் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இம்ரான் கான் கட்சி 93 இடங்களிலும் நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும் பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கட்சிகள், சுயேட்சைகள் 42 இடங்களை பிடித்துள்ளன.

மொத்தம் 264 இடங்களில் ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை. தனிப்பட்ட கட்சி அளவில் எடுத்துக் கொண்டால் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. நாவஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் சேர்த்து பார்த்தால் இம்ரான் கானுக்கு சரியாக 135 இடங்கள் வரும். இது ஆட்சி அமைக்க போதுமானது.

ஆனால் நவாஸ் ஷெரீப் பிலாவல் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். இதை இரண்டு கட்சி தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு 128 இடங்கள் உள்ளன. இன்னும் 5 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. சுயேட்சை வேட்பாளர்களை இழுக்க வாய்ப்புள்ளது. அல்லது சிறிய கட்சிகளை இணைத்துக் கொள்ளலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி சாலிய பீரிஸ்,

இம்ரான் கானை சிறையில் அடைத்தது கட்சியின் சின்னத்தை பறித்த போதிலும் பல தடைகளை மீறி பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

சூழ்ச்சிகள் எல்லா நேரங்களிலும் வெற்றியளிக்காது. மக்களின் விருப்பத்தை என்றும் நசுக்க முடியாது. இது இலங்கையின் தலைவர்களுக்கு ஒரு பாடம்.” எனக் கூறியுள்ளார்.