சஜித் கைவிட்டவரை அரவணைத்த ரணில்: ஜயவிக்கிரமவின் வீட்டுக்கு நேரில் விஜயம்

0
62

குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான காமினி ஜயவிக்ரம பெரேராவின் இல்லத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுகம்பலை தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட காமினி ஜயவிக்கிரமவின் மகன் அசங்க பெரேரா ஜயவிக்கிரமவை நேற்று அப்பதவியில் இருந்து கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அகற்றியிருந்தார். அவருக்குப் பதில் இரண்டு இணை அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று அசங்க பெரேராவின் தகப்பனார் காமினி ஜயவிக்கிரமவின் கட்டுகம்பலை வீட்டுக்கு ஜனாதிபதி ரணில் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

காமினி ஜயவிக்கிரம பெரேராவிடம் சுகம் விசாரித்த பின்னர், காமினி ஜயவிக்கிரம பெரேராவின் கடந்த கால அரசியல் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி சிலாகித்துள்ளார்.

இதன்போது ஜயவிக்ரம மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி வீட்டிற்கு அருகில் கூடியிருந்த பிரதேச மக்களுடனும் உரையாடியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், காமினி ஜயவிக்ரம பெரேராவின் புதல்வரான வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அசங்க ஜயவிக்ரம, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வின் போது உடனிருந்துள்ளனர்.