இதுவா யாழ் மக்களின் அடையாளம்; ஹரிஹரன் இசை நிகழ்ச்சி தொடர்பில் அங்கஜன் ஆதங்கம்!

0
159

யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த அரங்கில் நேற்று இரவு (9) நடைபெற்ற இசை நிகழ்ச்சி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் முகநூல் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,

“நேற்றைய நாளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற Hariharan Live in Concert and Star Night தொடர்பாக கலவையான விமர்சனங்களை இலங்கையிலும் இந்தியாவிலும் வெளிநாடுகளில் இருந்தும் அவதானிக்க முடிகிறது.

யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகள் நடாத்தப்படுவதும் அதனூடாக முதலீடுகள் கொண்டு வரப்படுவதும் வரவேற்கப்பட வேண்டியதாக இருந்தாலும் அந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது கவனிக்க வேண்டிய விடயங்களில் நெகிழ்ச்சித்தன்மை இருக்க கூடாது.

நேற்றைய நிகழ்வில் இடம்பெற்ற அசாதாரண நிலை என்பது முறையான திட்டமிடல் செய்யப்பட்டிருந்தால் கட்டுப்படுத்தக் கூடியதாகவே பலர் குறிப்பிடுகிறார்கள்.

இதுவா யாழ் மக்களின் அடையாளம்; ஹரிஹரன் இசை நிகழ்ச்சி தொடர்பில் அங்கஜன் ஆதங்கம்! | Angajan Worried About Hariharan S Concert Jaffna

நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள், நுழைவுச்சீட்டுகளினால் ஏற்பட்ட குழப்பங்கள், பங்கேற்கும் கலைஞர்களில் இறுதி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள், மைதான ஏற்பாடுகள், பாதுகாப்பு சார் குறைபாடுகள் என பல்வேறு சர்ச்சைகள் நேற்றைய குழப்பத்தின் காரணிகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

மறுபக்கத்தில் நிகழ்வை பார்வையிடச் சென்ற மக்களை தரக்குறைவாக சித்தரிக்கும் வகையிலும் சிலர் விமர்சிக்கிறார்கள். அவர்களில் சிலர் செய்த பிழைகளை ஒட்டுமொத்த யாழ்ப்பாண மக்கள் மீது திருப்புவதென்பது திட்டமிட்ட அரசியலாகவே தென்படுகிறது.

தவறிழைத்த மக்களை நான் கண்டிப்பதோடு, மண்ணிற்கு வருகை தந்திருக்கும் விருந்தினர்களை சங்கடப்படுத்தாமல் பார்த்துக்கொள்வதும் எமது மரபுசார் பண்பாடு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.

ஆக்ரோசமான மனநிலையில் இருக்கும் மக்களை கையாள்வது என்பது தனித்துவமான ஆளுமைத்திறன். அதிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் முற்பதிவு செய்துள்ளார்கள் எனத்தெரிந்திருந்த போது அதற்கான ஏற்பாடுகள் மிகக்கச்சிதமாக செய்யப்பட்டிக்க வேண்டும்.

இதுவா யாழ் மக்களின் அடையாளம்; ஹரிஹரன் இசை நிகழ்ச்சி தொடர்பில் அங்கஜன் ஆதங்கம்! | Angajan Worried About Hariharan S Concert Jaffna

யாழ்ப்பாண மாநகரசபை, பொலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைவரும் கூடுதல் பொறுப்போடு நடந்திருக்க வேண்டும். அவர்களுக்கான சரியான தகவல்களை ஏற்பாட்டாளர்கள் வழங்குவதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ரசிகர்களை கட்டுப்படுத்தும் பணிகளில் மாணவர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக அறிந்துகொண்டேன்.

இத்தகைய பணிகளில் முன் அனுபவம் இல்லாத மாணவர்களைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கையாள எடுக்கப்பட்ட முடிவு என்பது மிகவும் ஆச்சரியமானதாகவும் தவறான முன்னுதாரணமாகவும் அமைகிறது.

ஏற்பாடுகளில் செய்யப்படும் தவறுகள் பெரு நிகழ்ச்சியொன்றின் முடிவை முற்றிலுமாக மாற்றிவிடும் என்பதற்கு நேற்றைய இசைநிகழ்ச்சி ஓர் உதாரணமாகி விட்டது என்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு, நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் சார்பில் ஊடகங்களில் வெளியிடப்பட்ட கருத்துகள், குறிப்பாக “யாழ்ப்பாணம் வர யாருக்கும் விருப்பமில்லை. நாம் சமாளித்து வர வைத்துள்ளோம்…” உள்ளிட்ட கருத்துகளின் தாக்கமும் நேற்றிரவு நடந்த நிகழ்வில் தாக்கத்தை செலுத்தியிருக்க வாய்ப்புகள் உள்ளன.

அவர்கள் சொல்ல வந்த கருத்து வேறாக இருக்கலாம், பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் தொனிகள் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுவா யாழ் மக்களின் அடையாளம்; ஹரிஹரன் இசை நிகழ்ச்சி தொடர்பில் அங்கஜன் ஆதங்கம்! | Angajan Worried About Hariharan S Concert Jaffna

யாழ்ப்பாணத்துக்கு நல்ல விடயங்களை செய்ய வேண்டும் என்ற பெரு விருப்பம் கொண்டுள்ள சகோதரர் இந்திரன் பத்மநாதன் இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதேவேளை, தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் ஊடகங்கள் நேற்றைய நிகழ்வுகளை வைத்து யாழ்ப்பாண மக்களை பற்றிய தவறான அபிப்பிராயங்களை கட்டமைக்க முன்பாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் ஊடக சந்திப்பொன்று நடாத்தப்பட்டு விளக்கம் கொடுக்க வேண்டியதும் அவசியமாகும்.

இத்தகைய இசை நிகழ்வுகள் எதிர்காலத்தில் இடம்பெற இத்தகைய பொறுப்புக்கூறல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தையும் அதன் மக்களையும் தவறானவர்களாக சித்தரிக்கும் வாய்ப்புகளை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் எவரும் மேற்கொள்ள கூடாது என்பதை கேட்டுக்கொள்வதோடு, எமது தவறுகளை இனங்கண்டு சுய ஒழுக்கத்தை மேம்படுத்த வேண்டியதும் அவசியம் என்பதையும் வலியுறுத்துகின்றேன்.

அதேவேளை இதனைப்போல பெருமளவில் மக்கள் ஒன்றுகூடும், இந்திரவிழா, வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா, ஆலய விழாக்கள் உள்ளிட்டவற்றில் கண்ணியத்தோடு செயற்பட்டவர்கள் எம்மக்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆகவே நேற்றைய நாளில் இடம்பெற்ற தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான வகையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என துறை சார்ந்தவர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். இதுவல்ல யாழ்ப்பாண மக்களின் அடையாளம் எனஅங்கஜன் இராமநாதன் பதிவிட்டுள்ளார்.