கிளந்தான் மாநிலம் இயற்றிய ஷரியா சட்டங்கள் செல்லாது: மலேசிய உச்ச நீதிமன்றம்

0
259

மலேசியாவின் கிளந்தான் மாநிலம் இயற்றிய இஸ்லாமிய சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணான செல்லாத சட்டங்கள் என மலேசிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

மலேசிய உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு காரணமாக அந்நாடடின் ஏனைய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள பல ஷரியா சட்டங்கள் செல்லாத சட்டங்களாக மாறிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இரு வேறு சட்ட அமைப்புகள் உள்ளன. அந்நாட்டில் இஸ்லாமிய குற்றவியல், குடும்ப நல சட்டங்கள் நாட்டின் சிவில் சட்டங்களுடன் முஸ்லிம்களை கட்டுப்படுத்துகிறது. மலேசியாவில் சிவில் சட்டங்களை அந்நாட்டின் பாரளுமன்றம் இயற்றி வரும் நிலையில், மாநில சட்டமன்றங்கள் இஸ்லாமிய சட்டங்களை உருவாக்கி வருகின்றன.

மலேசிய உச்ச நீதிமன்றத்தின் 9 நீதியரசர்களை கொண்ட அமர்வு கிளந்தான் அரசாங்கத்தின் 16 ஷரியா குற்றவியல் சட்டங்கள் செல்லாது என நேற்று (9) தீர்ப்பளித்துள்ளது. 9 நீதியரசர்களில் ஒருவர் மாத்திரமே கிளந்தான் மாநிலம் இயற்றி சட்டங்கள் செல்லும் என தீர்ப்பளித்திருந்தார்.

இந்த சட்டங்களில், ஆசனவாயில் உறவு கொள்ளுதல், பாலியல் ரீதியான துன்புறுத்தல், வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்துவது, இறந்தவருடன் உடலுறவு வைத்துக்கொள்வது உள்ளிட்ட சட்டங்கள் அடங்கும்.

கிளந்தான் அரசாங்கம் இயற்றிய சட்டப் பிரிவுகள் மலேசிய பாராளுமன்றத்தின் அதிகாரத்தின்கீ ழ் வருவதாக தீர்ப்பை வாசித்த மலேசிய உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் துங்கு மைமுன் துவான் மாட் தெரிவித்துள்ளார்.

இதனால், மனுதாரின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதுடன் மாநிலம் இயற்றிய சட்டங்கள் செல்லாவது எனவும் அவர் கூறியுள்ளார்.