‘அக்கா’ என ஆசையாய் அழைத்து கொடூரமாக கொலை செய்த தம்பி – நடந்தது என்ன?

0
135

தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான கதையம்சத்தை கொண்டு விஷால், ரீமாசென் மற்றும் பரத்தின் நடிப்பில் வெளியான படம் தான் ‘செல்லமே’.

இந்த திரைப்படத்தில் ரீமாசென்னுக்கு தம்பியாக வரும் பரத், சகோதரி மீது காதல் கொண்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்ற கதையம்சத்தை அழகாக காட்டியிருக்கும் படமாகும்.

அந்த மாதிரியான சம்பவம் ஒன்று தான் தற்போது இந்தியாவில் இடம்பெற்று வைரலாக பேசப்பட்டு வருகிறது. கர்நாடகா – மன்டியா பகுதியில் ஜனவரி 20ஆம் திகதி ஒரு பாடசாலை ஆசிரியை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

28 வயதுடைய தீபிகா என்றே ஆசிரியையே இவ்வாறு கொலை செய்யப்பட்டார். தீபிகாவுக்கு 8 வயதில் மகள் ஒருவரும் இருக்கிறார்.

Oruvan

சம்பவ தினத்தன்று என்ன நடந்தது?

வழமையாக பாடசாலைக்கு செல்வதை போல் தீபிகா சென்றுள்ளார். ஆனால், சரியான நேரத்துக்கு வீட்டிற்கு வராததால், கணவர் நண்பகல் 01.30 மணியளவில் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

ஆனால், தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் சற்று சந்தேகமடைந்த கணவர், பாடசாலை நிர்வாகத்திடம் தொலைபேசி அழைப்பின் மூலம் விசாரித்துள்ளார்.

தீபிகா 12 மணியளவில் பாடசாலையிலிருந்து போய்விட்டதாக தெரிவித்துள்ளனர். தீபிகாவோ இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் மனைவியை தேடி சென்றுள்ளார் கணவர் லோகேஷ்.

பொலிஸ் முறைப்பாடு

இதனைத்தொடர்ந்து மறுநாள் கணவர் லோகேஷ் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஆனாலும், சம்பவ தினத்திலிருந்து 15 நாட்களுக்கு முன்னர் லோகேஷ்க்கும் தீபிகாவுக்கும் கடுமையான சண்டை இடம் பெற்றிருந்ததை அறிந்து கொண்டனர்.

இதனையடுத்து, பொலிஸார் லோகேஷ் மீது சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்த வேளையில், தீபிகாவின் உடலை தான் கண்டுபிடித்துவிட்டதாக பொலிஸாருக்கு லோகேஷ் தகவல் வழங்கியுள்ளார்.

இதனால், அவரே கொலையையும் செய்து உடலை கண்டுபிடிப்பது போல் நாடகமாடுவதாக பொலிஸார் சந்தேகித்தனர்.ஆனால், லோகேஷுடனான விசாரணைகளை தொடர்ந்து, நிதிஷ் கௌடா என்ற பக்கத்து தெரு பையன் பற்றிய விபரங்கள் தெரிய வருகின்றன.

நிதிஷ் கௌடா, தீபிகா காணாமல் போனதிலிருந்து மிகவும் பதற்றமாக இருந்ததாகவும் “தான் ஒரு தவறு செய்துவிட்டேன். ஆகவே, தங்கையின் திருமண வேலைகளை நீங்களே செய்து கொள்ளுங்கள்“ என வாட்ஸ்அப் மூலம் ஒரு குரல் பதிவையும் அவரின் அப்பாவுக்கு அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில், யோக நரசிம்மர் ஆலயம் மன்டியா பகுதிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் அந்த பகுதி காட்சிகளை காணொளியாக பதிவு செய்துள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தில் தொலைவில் இருவர் சண்டைபிடிப்பது போன்ற காட்சிகளும் பதிவாகியிருந்துள்ளது. இந்த 13 செக்கன் காணொளிதான் தீபிகாவின் கொலையில் முக்கிய சாட்சியாக மாறியது.

யோக நரசிம்மர் ஆலயம் மன்டியா பகுதியில் தீபிகாவின் ஸ்கூட்டர் கண்டுபிடிக்கப்படுகின்றது. அதே மலையடிவாரத்தில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்படுகின்றது. விசாரணையின் பின் அது தீபிகாவின் உடல் என உறுதிப்படுத்தப்படுகின்றது.

Oruvan

அக்கா – தம்பி அறிமுகம்

முதலில் அறிமுகமான நிதிஷ் கௌடா, என்னை சகோதரராய் நினைத்துகொள் என பேசி பழகிவந்துள்ளார். தீபிகாவும் அவரை தன் உடன்பிறவா சகோதரன் போல நினைத்து பழகிவர, காலப்போக்கில் நிதிஷ் கௌடா, தீபிகாவுக்கு இன்ஸ்டாகிராமை அறிமுகம் செய்கிறார்.

“நீ அழகாய் இருக்க… வீடியோக்கள் செய்து போடுவதால் அதிலிருந்து உனக்கு வருமானம் வரும்“ என்று ஆசைகாட்டி இன்ஸ்டாகிராமில் ரீல்களை செய்ய வைத்துள்ளார்.

தீபிகாவும் ஒப்புக்கொண்டு இன்ஸ்டாவில் வீடியோக்களை பதிவிடுகிறார். அதற்கு தம்பி நிதிஷ் கௌடா வீடியோக்களை எடிட் செய்வது, கெப்ஷன் போடுவது என உறுதுணையாக இருக்கின்றார்.

கடந்த இரண்டு வருடமாக இவர்களின் நட்பு தொடர்ந்துள்ளது. ‘அக்கா’ என அழைத்தாலும் தன்னை மனதார அப்படி நிதிஷ் நினைக்கவில்லை என்பதை தீபிகா அறிந்திருக்கவில்லை.

ஆனால், அளவுக்கு மீறி உரிமை எடுத்துக்கொள்வது போல இருப்பதால் கணவர் இருவரையும் எச்சரித்துள்ளார். இதனால் நிதிஷ் கௌடா வீட்டிற்கு வருவதை தவிர்த்துள்ளார்.

தொடர்ந்து, குடும்பத்தார் அவருடன் பேச வேண்டாம் என எச்சரித்ததால் குழந்தை, கணவன் தான் முக்கியம் என எண்ணிய தீபிகா, நிதிஷ் கௌடாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இப்படியிருக்கையில், தீபிகாவை விடாத நிதிஷ், தனது பிறந்த நாளை அவருடன் கொண்டாட வருமாறு தொலைபேசியில் அழைப்பெடுத்தபோது, தன்னால் வர முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், யோக நரசிம்மர் ஆலயத்துக்கு அழைத்துள்ளார். தொடர்ச்சியாக பேசவும் பழக வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.

மிரட்டலுக்கு பயந்து அந்த இடத்துக்கு ஸ்கூட்டரில் தனியாக சென்றுள்ளார் தீபிகா. இதன்போது இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தான் சுற்றுலா பயணிகளின் தொலைபேசியில் காணொளியாக பதிவாகியுள்ளது.

இதன்போது, நிதிஷ் கூறியவற்றிற்கு உடன்படாத தீபிகா, கோபமாக வீடு திரும்ப முற்பட்ட வேளையிலேயே அவரை நிதிஷ் கொலை செய்துள்ளார். பின் அதை மறைக்க 2 அடி ஆழமான குளியை தோண்டி அதில் அவரை புதைத்துள்ளார்.

Oruvan

கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த தீபிகா

குறித்த கோயில் அடிவாரத்தில், சடலமாக மீட்கப்பட்ட தீபிகா, முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தார்.

இவர் நிதிஷால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு ஆளானாரா என்பது தொடர்பாக பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு தீபிகாவின் உடலை அனுப்பி வைத்துள்ளனர்.

ராஜா ராணி படத்தில் ‘ப்ரதர்‘ என்ற வார்த்தை காதலாக மாறும் காட்சிகளை நாம் பார்த்து ரசித்தாலும், நிஜ வாழ்க்கையில் இவ்வாறான சம்பவங்கள் எம்மை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிடுகின்றது.

அக்கா என அழைத்து அந்த உறவை தவறாக பயன்படுத்தும் புதிய கலாசாரம் வெகுவாக இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்விலும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக இவர்கள் சமூக ஊடகங்களையே அதிகம் பயன்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூகஊடகங்கள் எம் பொழுதை போக்கவே அன்றி வாழ்க்கையையே சமூக ஊடகங்களில் கழிப்பதற்கு அல்ல என்பதை நாம் உணரும் வரை இவ்வாறான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன… தொலைபேசிகள் என்றுமே எம் அனைவருக்கும் ‘சட்டைப்பைக்குள் ஒரு சாத்தான் தான்’ !!

Oruvan