சவூதி அரேபியாவில் வேலை தேடிச் சென்ற இலங்கை வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கடுமையான துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், குமுதினி சந்தியா குமாரி செனவிரத்ன என்ற பெண்ணே மேற்படி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் சிறந்த வாய்ப்புகளைத் தொடரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துரதிர்ஷ்டவசமான அவலம் பல காலமாக இடம்பெற்று வரும் நிலையில் தற்போது, குமுதினி சந்தியா குமாரியும் இதில் இடம்பிடித்துள்ளார்.
முந்தலமவில் உள்ள கஜுவத்தையில் வசிக்கும் குமுதினி சந்தியா குமாரி, 2023 மே 23 அன்று குருநாகலில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பைப் பெற்றார்.
அவர் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்து முறையான நடைமுறைகளைப் பின்பற்றிதான் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
இவர் முதலில் சென்ற வேலையிடத்தில் துன்புறுத்தலை எதிர்கொண்டபோது, அடைக்கலம் தேடி அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தூதரகத்தின் தலையீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மூலம் பிரிதொரு வேலையை பெற்றுக்கொண்டார் குமுதினி சந்தியா குமாரி.
இந்த சம்பவம் தொடர்பான குமுதினி சந்தியா குமாரியின் கணவர் வர்ணகுலசூரிய நிரஞ்சன் பெர்னாண்டோ, தனது மனைவி அனுபவித்த கொடூரமான அனுபவங்களை ஊடகத்தின் வாயிலாக விவரித்துள்ளார்.
“வேலைவாய்ப்பு நிறுவனம் அவரை மூன்றாவது முறையாக தனது முந்தைய முதலாளியின்(கொடுமைகளை அனுபவித்த) சகோதரரின் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
அந்த வீட்டில், அவர் கடுமையான உடல் ரீதியான தாக்குதலுக்கும் அமில தாக்குதலுக்கும் உட்படுத்தப்பட்டார்.
இதன் விளைவாக பலத்த காயங்கள் ஏற்பட்டன. செனவிரத்னவுக்கும் கீழ் மூட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டியதாயிற்று.
இதனையடுத்து, எனது மனைவி, இலங்கைக்குத் திரும்புவதற்கு வசதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து துரித நடவடிக்கை எடுக்குமாறு நான் வேண்டுகோள் விடுத்தேன்.
அவரது தற்போதைய நிலை குறித்து எனக்கு மிகவும் மனவேதனையாக உள்ளது.
எனது மனைவி, இலங்கை தூதரகத்தின் பராமரிப்பில் இருப்பதாகவும், ஆனால், உடல் ஊனமுற்றவர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அவருடன் நேரடி தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை“ என தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு பதிலளிக்கும் வகையில், குமுதினி சந்தியா குமாரியின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் அனுபவித்த துஷ்பிரயோகத்தின் சட்ட அம்சங்களை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து மருத்துவ உதவிகளை வழங்குவதில் இலங்கைத் தூதரகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
மேலதிக செய்திகள்