“யோகப் பயிற்சி என் கால்களையும் உடலையும் வலுவாக்கியதோடு, திடலில் என்னை அமைதிப்படுத்தி, கவனம் செலுத்த உதவுகிறது” இந்திய டென்னிஸ் வீரர் போபண்ணா

0
189

டென்னிஸ் விளையாட்டில் உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆக வயதானவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் இந்தியாவின் ரோகன் போபண்ணா, 43.

நடப்பு அவுஸ்திரேலியப் பொது விருதுப் போட்டிகளில், போபண்ணா ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டனுடன் சேர்ந்து ஆடவர் இரட்டையர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

காலிறுதிச் சுற்றில் போபண்ணா – எப்டன் இணை 6-4, 7-6 என்ற கணக்கில் அர்ஜென்டினாவின் மேக்சிமோ கோன்சாலஸ் – ஆண்ட்ரெஸ் மோல்டெனி இணையைத் தோற்கடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது.

இதன்மூலம் ஆடவர் இரட்டையர் பிரிவில் அவர் உலகின் முதலாம் நிலை வீரராக முன்னேறினார். போபண்ணா உலகத் தரவரிசையில் முதலிடத்திற்கு உயர்ந்திருப்பது இதுவே முதன்முறை.

“எனது இந்தச் சாதனை, 40 வயதைத் தாண்டியவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என நினைக்கிறேன்,” என்றார் போபண்ணா.

முன்னதாக, ‘ஏடிபி மாஸ்டர்ஸ் 1,000’ வெற்றியாளர் பட்டம் வென்ற ஆக வயதான டென்னிஸ் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருந்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச்சில் எப்டனுடன் இணைந்து இண்டியன் வெல்ஸ் இரட்டையர் பட்டத்தை வென்றபோது, போபண்ணா அப்பெருமையைத் தேடிக்கொண்டார்.

கடந்த 2003ஆம் ஆண்டுமுதல் தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வருகிறார் போபண்ணா.

தாம் இவ்வளவு காலம் வெற்றிகரமாக டென்னிஸ் விளையாடுவதற்குத் தம்முடைய இயன்மருத்துவரும் (பிசியோதெரப்பிஸ்ட்) யோகப் பயிற்சியுமே காரணம் என்கிறார் அவர்.

“எனது முழங்கால்களில் குருத்தெலும்புகள் இல்லை என்பதால் எனக்கு என்ன தேவை என்பதை என் இயன்மருத்துவரிடம் கூறிவிட்டேன்,” என்று அவர் சொன்னார்.

மேலும், “யோகப் பயிற்சி என் கால்களையும் உடலையும் வலுவாக்கியதோடு, திடலில் என்னை அமைதிப்படுத்தி, கவனம் செலுத்த உதவுகிறது,” என்றும் போபண்ணா குறிப்பிட்டார்.