‘யாருயா இவரு, இந்த மாதிரி இளம் அமைச்சர் எங்களுக்கு இல்லை’: ஜீவன் தொண்டமானை புகழ்ந்த நடிகை ஐஸ்வர்யா

0
168

அமைச்சர் ஜீவன் தொண்டமான் போன்ற ஒருவர் எங்களுக்கு அமைச்சராக கிடைக்கவில்லை எனவும் அவர் மக்களுக்காக முன்னெடுத்துள்ள திட்டங்களை பாராட்டுவதாகவும் தென்னிந்திய பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டியுள்ளார்.

இங்குள்ள பெண்கள் அனைவருக்கும் கனவுகள் இருப்பதாகவும் அந்த கனவுகளை நனவாக்கும் வகையிலான திட்டங்களை அமைச்சர் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் இடம்பெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“பெண்களாகிய நாங்கள் மிகவும் வலிமையானவர்கள் நம் கனவுகளை நோக்கி நாங்கள் தான் பயணிக்க வேண்டும். அந்த கனவுகளை நிறைவேற்றி வைக்க உங்களுக்கு சிறந்த தலைவர் ஒருவர் இருகின்றார். இங்குள்ள மக்களுக்காக பல வாய்ப்புகளை அவர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

வைத்தியசாலை, கல்வி, போக்குவரத்து, குடியிருப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஆனாலும் கிராமிய வாழ்க்கை முறையில் இருந்து பெண்கள் அனைவரும் வெளியே வரவேண்டும்.

ஜீவன் தொண்டமான் என்றதும் ஒரு வயதான நபராக இருப்பாரென எண்ணியிருந்தேன். “யாருயா இந்த மனுஷன், ஜீவன் தொண்டமான என்றதும் நானும் தேடிப்பார்த்தேன். பார்த்தால் குட்டியாக, ஸ்மார்ட்டா, அழகான அமைச்சராக இருக்கின்றார்.

இந்த மாதிரி அமைச்சர் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அமைச்சர் ஜீவன் சென்னைக்கு வரவேண்டும். இவரைப் போல் ஒருவர் எங்களுக்கு அமைச்சராக கிடைக்கவில்லை” எனவும் தெரிவித்திருந்தார்.