திகிலான படங்களை பார்க்கும்போது நம் உடலில் இருந்து கலோரிகள் எரிக்கப்படும் என்று சொன்னால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் நடைமுறையில் இது உண்மை.
பெயரளவில் திகில் படங்கள் என்று கூறிவிட்டு படம் பார்த்தால் ஒன்றும் நடக்காது. பயத்தையும் பீதியையும் கிளப்பும் வகையிலான் காட்சிகளோடு கூடிய படங்களை பார்க்கவேண்டும். திகிலூட்டும் படம் ஒன்றை சுமார் 90 நிமிடங்களுக்கு பார்த்தோமானால் நம் உடலில் 113 கலோரிகள் எரிக்கப்படும்.
இந்த கலோரிகளை குறைப்பதற்காகவே நாம் உடற்பயிற்சிகளை செய்கிறோம். அதற்குப் பதிலாக திகிலூட்டும் படம் பார்த்தால் போதுமா என்ற கேள்வி எழக் கூடும்.
திகிலூட்டும் படம் என்று சொல்லிக் கொண்டு ஏதோ ஒரு படத்தை பார்ப்பதனால் இந்த அளவுக்கு கலோரிகள் குறைந்து விடாது. உண்மையாகவே நம் மனதில் பதற்றத்தை தூண்டக் கூடிய படம் ஒன்றை பார்க்கும்போதுதான் இவ்வாறு கலோரிகள் குறையுமாம்.
ஸ்டீபன் கிங் என்ற ஹாலிவுட் இயக்குநர் எடுத்த தி ஷைனிங் என்ற படத்தை பார்த்தவர்களுக்கு அதிகபட்சமாக 184 கலோரிகள் வரை குறைந்ததாம். அதேபோல கிளாசிக் ஜாவ்ஸ் என்ற படம் பார்த்தவர்களுக்கு 161 கலோரிகளும், தி எக்ஸோர்சிஸ்ட் என்ற படம் பார்த்தவர்களுக்கு 158 கலோரிகளும் குறைந்தன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எப்படி கலோரி குறைகிறது
பீதியை கிளப்பும் காட்சி திரையில் ஓடிக்கொண்டிருக்கும் போது நாம் அச்சத்தில் உறைந்து போயிருப்போம். அந்த சமயத்தில் மிகுதியான மனஅழுத்தம் ஏற்பட்டு அதன் எதிரொலியாக அட்ரினல் சுரப்பி வேலை செய்யத் தொடங்கும்.
இதற்கு அடுத்த கட்டமாக நம் இதயத்துடிப்பு வேகமாக துடிக்கத் தொடங்கும் மற்றும் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அட்ரினலைன் ஹார்மோன் மிகுதியாக சுரப்பதனால் பசி கட்டுப்படுத்தப்படும். அதேவேளை மெடபாலிக் விகிதம் அதிகரித்து நம் கலோரிகள் எரிக்கப்படும்
கண்டிப்பாக படத்திற்கு நடுவே ஸ்நாக்ஸ் கூடாது
திகிலான படங்களை பார்க்கிறேன் என்ற பெயரில் படத்தின் இடையே ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் கலோரி குறைப்பு சாத்தியமில்லை. எதையும் சாப்பிடாமல் படம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இதுபோன்று கலோரிகள் குறையும்.