வாட்ஸ்அப் சேனல்களுக்கு புதிய அம்சம்… ஆட்டோமேட்டிக் ஆல்பம் கிரியேஷன்!

0
157

அடிக்கடி புதுவிதமான அம்சங்களை சேர்ப்பதன் மூலமாக ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு பெயர் போனது வாட்ஸ்அப் அப்ளிகேஷன். மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இந்த இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷன் ஒரு சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் சேனல்களை அறிமுகப்படுத்தியது.

தொடர்ந்து வாட்ஸ்அப் சேனல்களில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வாட்ஸ்அப் சேனல்களுக்கு ஆட்டோமேட்டிக் ஆல்பம் கிரியேஷன் அம்சத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட மாற்றம் WABetaInfo-ஆல் கண்டறியப்பட்டுள்ளது. இது வாட்ஸ்அப் பீட்டாவின் சமீபத்திய ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.23.26.16 அப்டேட்டில் காணப்படுகிறது.

குறிப்பிட்ட சேனல்களில் பல விதமான இமேஜ்கள் மற்றும் வீடியோக்களை பல்வேறு அட்மின்கள் ஷேர் செய்யும் போது இந்த அம்சம் வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை வாட்ஸ்அப் தாமாக முன்வந்து ஒரே ஆல்பமாக ஒருங்கிணைக்கிறது. பின்னர் சேனல் மெம்பர்கள் அதனை டாப் செய்வதன் மூலமாக அனைத்து மீடியா ஃபைல்களையும் பயன்படுத்தலாம்.

இது பல வருடங்களாக வாட்ஸ்அப் சாட்கள் மற்றும் வாட்ஸ்அப் குரூப்புகளில் காணப்பட்டாலும் இந்த அம்சம் தற்போது வாட்ஸ்அப் சேனலிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலமாக ஃபைல்களில் உள்ள மீடியா அமைப்பு இன்னும் தெளிவாகி இருக்கிறது என்று சொல்லலாம். பர்சனல் சாட்கள் அல்லது குரூப்புகளில் எப்படி வேலை செய்கிறதோ அதே மாதிரியான செயல்பாட்டை வாட்ஸ்அப் சேனல்களிலும் இந்த அம்சம் வெளிப்படுத்துகிறது.

இந்த அம்சத்தை வாட்ஸ்அப் தற்போது யாருக்கு வெளியிடுகிறது?

WABetaInfo வெளியிட்ட தகவலின் படி, இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு போனில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் (v2.23.26.16) இன்ஸ்டால் செய்து இருக்கக்கூடிய ஒரு சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே கிடைப்பதாக சொல்லப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு எப்போது இந்த அம்சம் கிடைக்க பெறும் என்பது குறித்த எந்த ஒரு தகவலும் தற்போது வரை கிடைக்கவில்லை.

அடிக்கடி பல்வேறு விதமான மீடியா ஃபைல்களை ஷேர் செய்யக்கூடிய வாட்ஸ்அப் சேனல்களில் ஏற்படக்கூடிய குழப்பத்தை இந்த புதிய அம்சம் நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தபடியாக வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் உள்ள ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளுக்காக ஒரு புதிய ரிப்ளை பாரை சோதித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த அம்சம் தற்போது பீட்டாவில் கிடைக்கப் பெறுகிறது. இதன் மூலமாக யூசர்கள் மற்றொரு யூசரின் ஸ்டேட்டஸ் அப்டேட்டுக்கு எளிதாக பதில் அளிக்கலாம்.