இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த யாழ் யுவதி: இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு

0
111

இலங்கையில் இடம்பெறும் முக்கோண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட யுவதி ஒருவர் உள்வாங்கப்பட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல் வரை இடம்பெறும் இந்தத் தொடரில் இலங்கை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

இந்த தொடரில் விளையாடும் 20 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதில் அமு சுரேன்குமார் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி இடம்பெற்றுள்ளார். கிறிஸ் கெஸ்ட் இந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் 2023ஆம் ஆண்டு இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண தொடரில் விளையாடிய வீராங்கனைகளும் இடம்பெற்றள்ளனர்.

அதேபோல் 2025ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண தொடரில் விளையாடக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படும் வீராங்கனைகளும் இந்த அணியில் உள்வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

“இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு தொடர், துணைக் கண்டத்தில் விளையாடும் சிறந்த அனுபவத்தை அணிக்கு வழங்கும்” என இங்கிலாந்து மகளிர் தலைவி ரிச்சர்ட் பெட்ப்ரூக் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் காரைநகரை பூர்வீகமாகக் கொண்ட அமு சுரேன்குமார் இங்கிலாந்து கழக மட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.