இலங்கை தமிழர்களுக்கு நிகரான ரசிகர்கள் உலகத்தில் எந்நாட்டிலும் இல்லை: பாடகர் கிரிஷ் புகழராம்

0
102

இலங்கை இரசிகர்களுக்கு நிகரான இரசிகர்கள் இந்த உலகத்தில் எந்நாட்டிலும் இல்லை என பிரபல தென்னிந்திய பின்னணி பாடகரான கிரிஷ் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெறவுள்ள நேரடி இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள நிலையில் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்கேற்று ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன் தாம் உள்ளிட்ட தமது அணியில் இணைந்துள்ள அனைவரும் இலங்கை இரசிகர்களை இசை மழையால் திருப்தி படுத்துவதற்கு நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேநேரம் தென்னிந்திய பின்னணிப்பாடகர் க்ரிஷ் உடன் வருகை தந்துள்ள சுஜா வருணி மேடையில் தனது நடனக்கலையால் அனைவரையும் உற்சாகப்படுத்தவுள்ளார்.

மேலும் செந்தில் தாசன், என்.எஸ்.கே, சௌந்தர்யா உள்ளிட்ட தரப்பினர் பல புதிய பாடல்களையும் புகழ்பெற்ற இடைக்கால மற்றும் பழைய பாடல்களையும் மக்களுக்காக வழங்கவிருக்கின்றனர்.

சிறிது காலம் பாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதனை தாம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த பாடகர் கிரிஷ், அடியே கொல்லுதே பாடல் மீண்டும் பிரபல்யமானதை தொடர்ந்து மீண்டும் பாடுவதற்கு சந்தரப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அந்த வகையில் சிங்கள மொழியானாலும் சீன மொழியானாலும் தாம் பாடுவதற்கு தயாராகவுள்ளதாகவும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு தற்போது கிடைக்கப்பெறுகின்ற நிலையில் தாம் முதலில் நடிகனாகுவதற்கே ஆசைப்பட்டதாகவும் செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்திருந்தார் பாடகர் கிரிஷ்.

மேலும் செந்தில் தாசனுடன் இணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருட்பாக்களுக்கு மெட்டமைத்து கம்போஸ் செய்துள்ளதாகவும் கிரிஷ் குறிப்பிட்டார்.

அதேநேரம் இலங்கைக்கு தாம் இதற்கு முதல் வருகை தந்திருந்தாலும் தனது திறமையை வெளிக்கொணர்வதற்குரிய சந்தர்ப்பம் தற்போதே கிடைத்துள்ளதாக பிக்பாஸ் புகழ் சுஜா வருணி குறிப்பிட்டார்.

இலங்கை இரசிகர்களின் நம்பிக்கையை நாம் காப்பாற்றுவோம், அதற்கான தயார்படுத்தல்களுடனேயே இலங்கையை வந்தடைந்திருக்கின்றோம் என என்.எஸ்.கே. தெரிவித்ததோடு செந்தில் தாசனும் இந்த சந்தரப்பத்தில் இலங்கை இரசிகர்களுக்கு அன்போடு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்