மியான்மர் எல்லையில் சிக்கிக்கொண்ட 56 இலங்கையர்கள்; கூண்டுக்குள் அடைத்து சித்திரவதை!

0
155

தாய்லாந்து – மியான்மர் எல்லைக்கு அருகில் செயல்படும் மோசடிக் கும்பலிடம் சிக்கியுள்ள இலங்கையர்களிடமிருந்து கட்டாய உழைப்பு, உடல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத தடுப்புக்காவல் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், குறித்த அனைவரையும் மீட்க அவர்களின் உறவினர்கள் தீவிரம் காட்டியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“சைபர் கிரிமினல் ஏரியா” என்று அழைக்கப்படும் மியான்மர் எல்லைப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட இலங்கை இலங்கையர்கள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.

தாய்லாந்தின் தகவல் தொழில்நுட்பத் துறையில் இலாபகரமான வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் வாக்குறுதிகளால் இவர்கள் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சுமார் 56 இலங்கை இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடிக் கும்பலிடம் இருந்து தப்பி வந்த ஒருவர் கொழும்பு ஊடகத்திடம் கருத்து வெளியிடுகையில்,

“இது ஒரு அடிமை முகாம் போன்றது. இலங்கையில் மோசமான சூழ்நிலையில், நாங்கள் இந்த திட்டத்திற்கு இரையாகிவிட்டோம். அவர்கள் எங்களை மற்றவர்களுடன் போலியான முறையில்ஏமாற்ற வற்புறுத்தினார்கள்.

மறுத்தால், எங்களை கைவிலங்கிட்டு, வேலை செய்யும்படி வற்புறுத்துவார்கள், பின்னர் எங்களை கூண்டுகளில் அடைத்து, இருட்டு அறைகளில் கட்டிவைப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

“இந்த இடத்திற்கு நாங்கள் மாற்றப்பட்ட விதம் ஆபத்தானது. அவர்கள் எங்களை நான்கு வாகனங்களில் இராணுவம் போன்ற பிரிவுடன் அழைத்துச் சென்றனர், எங்கள் தொலைபேசிகளைப் பறிமுதல் செய்தனர்.

நாங்கள் இந்த முகாமுக்கு வந்தபோது, ​​எங்களை வெளியேச் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டனர். எங்களை விடுவிக்க 8,000 அமெரிக்க டொலர்கள் கேட்டனர்.

அங்கு இலங்கையர்களுடன் நான்கு அலுவலகங்கள் உள்ளன. எங்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை, வலுக்கட்டாயமாக பிடித்து, ஒரு நாளைக்கு 15-17 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயப்படுத்தினர் என கூறியுள்ளார்.

மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார, அந்தப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்கள் இருப்பதை உறுதிப்படுத்தினார்.

அத்துடன், அவர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மியான்மர் அரசாங்கத்துடன் முன்னெடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதுவரையில் 32 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், மோசடிக் கும்பலிடம் சிக்கியுள்ள மேலும் 56 பேரை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.