கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொட, காலா சந்தியில் உள்ள இரவு விடுதியில் நேற்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. அத்துடன், குடிபோதையில் இருந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
பெண்களுக்கு இடையில் தகராறு
சில தினங்களுக்கு முன்னர் விடுதிக்கு வந்த இரண்டு பெண்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஈடுபட்ட பெண் ஒருவர் கடந்த 17ஆம் திகதி இரவு விடுதிக்கு வந்து மது அருந்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த இரவு விடுதிக்கு வேகன் ஆர் மற்றும் கெப் வண்டியில் குழுவினர் வந்துள்ளனர். பின்னர், அவர்கள் விடுதியை விட்டு வெளியேறும் போது, அவர்கள் 4 முறை மேல்நோக்கிச் சுட்டனர், பின்னர் அவர்கள் வந்த வாகனங்களுக்கு அருகில் சென்று வானத்தை நோக்கி மேலும் இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, விடுதி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை பயமுறுத்தும் நோக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.