அதானி நிறுவனத்துக்கு நிலங்களை தாரைவார்க்க இடமளியோம் – ரிஷாட் பதியுதீன்

0
112

அக்குரனையில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த நிரந்தரமான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புத்தளம் மாவட்டத்தில் அல் ஜித்தா, ரத்மல்யாய கிராமங்களில் இருக்கும் இரண்டு பாலங்கள் சேதமடைந்து, கடந்த மூன்று வருடங்களாக அதனை புனரமைக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இதனால், அந்தப் பிரதேச மக்கள் பெரிதும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். குறித்த ஊருக்கு செல்வதற்கு பெருந்தடையாக இது இருப்பதனால் பாலங்களை புனர்நிர்மாணிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று ஏனைய இடங்களிலும் இவ்வாறு அரைகுறை வேலைகளுடன் காணப்படும் பாலங்களின் புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மன்னார் – புத்தளம் பாதை தொடர்பில் பலமுறை இந்தச் சபையில் சுட்டிக்காட்டிய போதும் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மன்னார், முசலிப் பிரதேசத்தில் அளக்கட்டு எனும் புதிய மீள்குடியேற்ற கிராமத்தில் பாதைகள், பாலங்கள் உடைந்திருந்த போதும் அவற்றை செப்பணிடப்படவில்லை. ஒரு இலட்சம் கிலோமீட்டர் பாதை புனரமைப்புத் திட்டத்திலும் உள்வாங்கப்படவில்லை.

அக்குரனையில் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்கள் பல கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். அந்தப் பிரதேச மக்களுக்கு அண்மையில் 300 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் 120 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. எனவே, இதற்கு நிரந்தர வேலைத்திட்டம் ஒன்று தேவை. வெளிநாட்டு உதவிகளைப் பெற்றாவது இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக் காண வேண்டும்.

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இந்த வருட நிதி ஒதுக்கீட்டில் 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் கூறினார்.

அதனை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் மன்னாருக்கு மட்டுமன்றி முழு நாட்டுக்கும் நன்மை ஏற்படும். ஒலுவில் துறைமுகத்தினால் அந்தப் பிரதேச மக்களுக்கு மிகவும் நன்மைபயக்கக்கூடிய நிலை இருந்தபோதும், முறையாக கவனிக்கப்படாமையினால் ஊருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.

மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நிபுணத்துவம் வாய்ந்த வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் இந்தத் துறைமுகத்தை சீரமைத்து, மக்களின் துன்பங்களை போக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றேன்.

அதுமட்டுமல்ல, மன்னாரில் அதானி நிறுவனம் கொண்டுவரவுள்ள திட்டங்கள் தொடர்பில் அறிகின்றோம். சர்வதேச ரீதியில் கீர்த்திபெற்ற மன்னார் தீவை முற்றுமுழுதாக சுற்றுலாத்துறைக்கு தாரைவார்க்க நாம் இடமளிக்க முடியாது.

அத்துடன் இந்தத் திட்டங்களுக்காக அங்குள்ள தனியார் காணிகளை பலாத்காரமாக, குறைந்த விலைக்கு அரசாங்கம் வாங்கி, அதானி நிறுவனத்துக்கு இன்னுமொரு விலைக்கு கொடுக்கின்றது.

இது நியாயமா? எனக் கேட்கின்றேன். தனியார் நிறுவனங்களுக்கு பொதுமக்களின் காணிகளை விற்காதீர்கள். இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலையே ஏற்படும்.” என தெரிவித்தார்.