இலங்கை மக்களிடம் வசூலிக்கப்படவுள்ள 30 ஆயிரம் ரூபா..!

0
153

2024ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியை 600 பில்லியன் ரூபாவால் அதிகரித்துக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஆண்டு ஒரு தனிநபரிடமிருந்து மேலதிகமாக 30 ஆயிரம் ரூபாவை வரி அறவிடல் ஊடாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்  இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் வரி கொள்கையை விரிவுப்படுத்தும் வகையில் காணப்படுகிறது. வரி விதிப்பை தவிர அரச வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் முன்மொழியப்படவில்லை. பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாகவும், பண்டங்கள் மற்றும் பொருட்கள் மீதான வரியையும் ஒப்பீட்டளவில் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

கடன்களை திருப்பிச் செலுத்தாத அரசியல்வாதிகள் 

2024 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியை 600 பில்லியன் ரூபாவால் அதிகரித்துக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஆண்டு ஒரு தனிநபரிடமிருந்து மேலதிகமாக 30 ஆயிரம் ரூபாவை வரி அறவிடல் ஊடாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வரி கொள்கை விரிவுப்படுத்தல் சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும். அரச வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை பெரும்பாலான அரசில்வாதிகள் உட்பட முக்கிய தரப்பினர் திருப்பிச் செலுத்தவில்லை. இவ்வாறானவர்களிடமிருந்து 700 பில்லியன் ரூபாவை அரச வங்கிகள் அறவிட வேண்டியுள்ளது.

பெற்றுக்கொண்டுள்ள கடன்களை மீள செலுத்தாமல் இருப்பவர்களின் பெயர் பட்டியலை நாடாளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு அரச வங்கிகளின் பிரதானிகளிடம் வலியுறுத்தியுள்ளோம்.

பெயர் பட்டியல் கிடைத்தவுடன் ஊழலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் பலரின் உண்மை முகம் வெளிவரும்.

தேசிய இறைவரித் திணைக்களம் உட்பட முக்கிய நிறுவனங்கள் வரி அறவிடலை முறையாக மேற்கொள்கிறதா என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

வரி நிலுவை தொகையை செலுத்தாத மதுபான உற்பத்தி நிறுவனங்களின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்யுமாறு மதுவரி திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கினோம்.

இதன் பின்னர் குறித்த நிறுவனங்கள் நிலுவை வரியை செலுத்தியுள்ளன. பாதுகாப்பற்ற பொது போக்குவரத்து சேவையே நடைமுறையில் உள்ளது.

வாகன நெரிசல் காரணமாக ஒரு நாளைக்கு 1 பில்லியன் ரூபா நிதி வீண்விரயமாக்கப்படுகிறது. பொது போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்த 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக தற்போதைய ஆளும் தரப்பினர் போர் கொடி உயர்த்தி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

ஆனால் தற்போது அந்த கொள்கையையே செயற்படுத்துகிறார்கள். அபிவிருத்தி கொள்கை திட்டங்களை காலத்துக்கு காலம் மாற்றியமைக்காமல் சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.