பதில் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமனம்

0
177

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் பதில் பொலிஸ்மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் கடமையாற்றிய வந்த நிலையிலேயே அவர் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுபவரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக மூன்று வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படவுள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்த பின்புலத்திலேயே இன்று இந்த நியமனம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டிவிக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு கடந்த 25ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

தேஷபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதால் வெற்றிடமாகவுள்ள மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படைத் தளபதி வருண ஜயசுந்தர நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.