இலங்கை அணிக்கு நீண்டகால தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்; மார்வன் அத்தபத்து கோரிக்கை

0
205

இலங்கை கிரிக்கெட் அணிக்கு நீண்டகால அடிப்படையிலான அணித் தலைவர் ஒருவர் நியமிப்பது குறித்து கவனம் செலுத்துவது அவசியமாகுமென இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான மார்வன் அத்தபத்து தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணலொன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு கிரிக்கெட் அணியின் அட்டவணையை கவனமாக ஆராய்ந்து ஒரு சிறந்த திட்டத்தை உருவாக்க வேண்டும்.

அணியின் தேவைக்கு ஏற்ப தலைவரை தேர்வு செய்ய வேண்டும். மாறாக தலைவரை நியமித்துவிட்டு அணியை உருவாக்க கூடாது. அவ்வாறு செய்வதால் தான் நாம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.

தென்னாப்பிரிக்கா அணியை கட்டியெழுப்ப நீண்டகால திட்டமொன்று வகுக்கப்பட்டது. அதன் பின்னர்தான் கிரஹாம் ஸ்மித்தை நீண்டகால தலைவராக நியமித்தனர். அவ்வாறான ஒரு முடிவை நாம் எடுக்க வேண்டும்.

அணியில் சிறப்பாக செயல்பட்டவர்களைதான் கடந்த காலத்தில் தலைவர்களாக நியமித்திருந்தோம். அர்ஜுன ரணதுங்க, சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன, குமார சங்கக்கார உள்ளிட்டவர்கள் இவ்வாறுதான் தலைவர்களாக தெரிவாகினர்.

ஆனால் தற்போது அணியின் தலைவராக நியமிப்பதற்காகவே அணிக்கு சிலர் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலைமையை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த நேர்காணலில் கலந்து கொண்டு தலைவர் பதவி குறித்து கருத்து தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் தற்போதைய சூழ்நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் ஆகிய இரண்டிலும் இலங்கையை வழிநடத்த தனஞ்சய டி சில்வா பொருத்தமானவராக இருப்பார்.

துடுப்பாட்ட வரிசையில் தனஞ்சய டி சில்வா பல சந்தர்ப்பங்களில் அநீதியை எதிர்கொண்டுள்ளார். அவர் அணிக்குள் உள்வாங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இரண்டாம் அல்லது மூன்றாவது துடுப்பாட்ட வீரராக களமிறக்கப்பட்டார். அவர் சிறந்த துடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனால் அவரை 5ஆம் 6ஆம் துடுப்பாட்ட வீரராக தற்போது களமிக்குகின்றனர். அவரை தலைவராக நியமித்து 4ஆவது இடத்தில் களமிறக்க வேண்டும்.” என்றார்.