இலங்கை கிரிக்கெட்டில் இனவாதம்; அதுவே அணியின் வீழ்ச்சிக்குக் காரணம் – கூட்டமைப்பு கண்டனம்

0
163

இலங்கை கிரிக்கெட் அணி சிங்கள அணி அல்ல. அவ்வாறு இருந்தால் இந்நிலைமை மாற வேண்டும். இன, மத பேதங்களுக்கு அப்பால் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழுவை பதவி நீக்கும் பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“உலகக்கிண்ண தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறியுள்ளது. அத்துடன் அடுத்து வரும் சாம்பியன் கிண்ண போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள பரிதாபநிலையும் ஏற்பட்டுள்ளது.

1996இல் உலகக்கிண்ணம் வென்ற இலங்கை அணி இன்று பரிதாபநிலையில் இருப்பதற்கு காரணம் என்ன? கிரிக்கெட்டில் ஊழல் என்பதற்கு அப்பால் அரசியல் மேலாதிக்கம் செலுத்துகின்றது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை கிரிக்கெட்டுக்குள் இனவாத சிந்தனை உள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியை முழுமையான அணியாக ஏற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இந்தியாவை எடுத்துக் கொண்டால் அங்கு இன, மத, மாநில வேறுபாடுகளுக்கு அப்பால் திறமைக்கே வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

இந்த உலகக்கிண்ணத்தில்கூட சிறுபான்மையின வீரர்கள் அனைத்தையும் கடந்தவர்களாக தமது நாட்டுக்கு கிடைக்கும் வெற்றிக்கு பெரிதும் பங்களிப்பு செய்து வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் அணியில் சிறுபான்மையின வீரர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். அத்துடன் புறக்கணிக்கப்படுகின்றனர்.

கிரிக்கெட்டுக்குள் இன பாகுபாடு இல்லாமல் செய்யப்பட வேண்டும். இன்று இலங்கை உதைப்பந்தாட்ட அணி சிறப்பாக செயல்படுகின்றது. அங்கு அனைத்து இன வீரர்களும் உள்ளனர்.” என தெரிவித்தார்.