2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இலங்கை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்துள்ளார்.
இன்றைய தினம் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைத்தானத்தில் இடம்பெற்றது.
இதன்போது, 2023 உலகக் கோப்பை விளையாடும் நிபந்தனைகளின் படி, ஒரு புதிய துடுப்பாட்ட வீரர் வந்த 2 நிமிடங்களில் தனது முதல் பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
இந்நிலையில் ஏஞ்சலோ மேத்யூஸ் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு பந்தை எதிர்கொள்ளாததால் அவரை அவுட் செய்யுமாறு பங்களாதேஷ் அணி நடுவரிடம் முறையிட்டது.
இது தொடர்பில் இலங்கையின் கேப்டன் சிலவற்றை நடுவர்களிடம் விளக்க முயன்றார் இருந்தபோதிலும் அது பலனில்லை. விதிகளின்படி ஒரு புதிய துடுப்பாட்ட வீரர் 2 நிமிடங்களுக்குள் பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மேத்யூஸ் களத்தில் இருந்தபோதிலும் அவரது ஹெல்மெட்டில் சில பிரச்சனை இருந்ததால் பேட்டிங் செய்ய தயாராகவில்லை.
இதன்போது பங்களாதேஷ் மேத்யூஸுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு செய்த நிலையில் நடுவருக்கு அவரை வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.
எதிரணி வீரர்கள் மேல்முறையீடு செய்தால் மட்டுமே கள நடுவர்கள் ஒரு துடுப்பாட்ட வீரரை அவுட் செய்ய முடியும். பங்களாதேஷ் மேல்முறையீட்டை வாபஸ் பெற முடிவு செய்திருந்தால் மேத்யூஸ் நடுநிலையில் இருந்திருப்பார்.
இருப்பினும் நடுவர்கள் அவரை அவுட் என தெரிவித்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர். இதனையடுத்து மேத்யூஸ் கடுமையான கோபத்துடன் வெளியேறினர்.
இதேவேளை சர்வதேச கிரிக்கெட்டில் டைம் அவுட் வழங்கப்பட்ட முதல் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தான். இது தொடர்பில் சமூக வலைதளங்களில் பலவிதமான சர்ச்சைக்குரிய கருத்துகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.