2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்கா அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டியுள்ளது.
சென்னையில் நேற்று (27-10-2023) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 270 ஓட்டங்களை பெற்று கொண்டுள்ளது.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக சவுத் ஷகீல் 52 ஓட்டங்களையும் பாபர் அசாம் 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி 4 விக்கெட்டுக்களையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதன்படி, 271 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ராம் 91 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுக்களையும், ஹரிஸ் ரவூப், முகமது வாசிம், மற்றும் உஸாமா மிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இந்த வெற்றியை தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.