அம்பிட்டிய சுமனரத்தின தேரரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் – மனோ கணேசன் 

0
137

தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன், தெற்கில் வாழும் தமிழரை கொல்லுவேன் என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கத்தும் மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அல்லது அங்கொடையில் அடைக்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இருதயபுரம் கிழக்கு பகுதியிலுள்ள பௌத்த மக்களின் மயான பகுதிக்குள் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் தமது வீடுகளை உடைத்த சில கழிவுப்பொருட்களை கொட்டியுள்ளதாக தெரிவித்து தமது சகாக்களுடன் குறித்த பகுதிக்கு சென்ற அம்பிட்டிய சுமனரத்ன தேரர், அங்குள்ள பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்தார்.

தேரரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தூற்றிய ராஜாங்கன தேரர், போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய ஆகியோரை ICCPR சட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் தான் இன்று தமிழ் மக்களை கொல்லுவேன், வெட்டுவேன் என்று பகிரங்கமாக கொலைவெறி கூச்சல் எழுப்பும் அம்பிட்டிய சுமனரத்தின தேரரை இவ்வரசு கைது செய்யாதா?

எல்லாவற்றையும் கடந்து செல்வதைப்போல் ஜனாதிபதி இதையும் கடந்து போக முயற்சிக்க கூடாது . தேரரது தாயின் கல்லறை தொடர்பில் ஏதும் பிரச்சினை இருக்குமாயின் பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டும்.

சட்டப்படியான நாகரீக முறையில் பிரச்சினையை தீர்த்திருக்க வேண்டும். ஆனால் மனநோயாளி போல் செயற்படுவதும் தமிழ் மக்கள் மீது தமது சண்டித்தனத்தை காட்டுவதும் எவ்விதத்தில் நியாயம்?

ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய ஆகியோரை கைது செய்ய முடியுமானால், ஏன் இவரை கைது செய்ய முடியாது? உண்மையில் இவர்களை விடவும் ஆயிரம் மடங்கு அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் பேச்சு மோசமானது.

இன்று அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் மட்டக்களப்பு விகாரையை நடத்த இலங்கை இராணுவம் உதவுகிறது. நாட்டின் இராணுவம் தேரருக்கு செய்யும் உதவிகள் தொடர்பில் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

மக்களின் வரிப்பணத்தில் சாப்பிடும் தேரர் பல காலங்களாகவே இன பிரிவினவாத்தை ஏற்படுத்தும் வகையில் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். அதுமாத்திரமன்றி அரச அதிகாரிகளின் செயற்பாட்டில் நேரடியாக தலையீடு செய்து வருகிறார்” என தெரிவித்தார்.