லண்டனில் இருந்து கிளம்பி சென்ற விமானத்தில் உயிரிழந்த பெண் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனில் இருந்து பிரான்சின் நைஸ் நகருக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று இரு தினங்களுக்கு முன்னர் புறப்பட்டது. ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் 73 வயதான ஒரு பெண்மணியும் பயணித்தார்.
நைஸ் நகரில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து அனைவரும் தங்கள் பெட்டிகளுடன் வெளியேற வரிசையில் காத்திருக்கும் போது, குறித்த பெண்மணி மட்டும் எந்த சலனமும் இன்றி காணப்பட்டுள்ளார்.
பின்னர் அவரை பரிசோதித்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இந்தநிலையில் உயிரிழந்த பெண்ணின் பெயர் லிண்டா கர்டோசோ என தெரியவந்துள்ளது. தன்னுடைய 73வது பிறந்தநாளை கொண்டாடிய சில நாட்களில் அவர் இறந்திருக்கிறார்.
லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரகவியல் பேராசிரியர் மற்றும் மகளிர் மருத்துவ ஆலோசகராக லிண்டா இருந்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.
குறித்த மருத்துவமனையில் லிண்டா 44 ஆண்டுகளாக பணியாற்றியுள்ள நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.