சனல் 4 வெளியிட்ட காணொளிகளுக்கு விசாரணை இடம்பெறுமா..!

0
172

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம், தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் வவுனதீவில் நடந்த தாக்குதலை தமிழீழ விடுதலைப்புலிகள் மீது பலி சுமத்தியுள்ளனர். ஆனால் அதனை உண்மையில் யார் செய்தனர் என்பதனை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். தங்களின் அரசியல் காரணங்களுக்காக தாக்குதல்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்படி கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் மூலமே கோட்டாபய ராஜபக்‌ச ஜனாதிபதியாகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படுகின்றது.

இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு ஏற்றால் போன்று புலனாய்வாளர்கள் செயற்படுவதனாலேயே சர்வதேச விசாரணையை கோர வேண்டியுள்ளது. இவர்கள் ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலில் தான் இயங்கிக்கொண்டு இருக்கின்றனர். இதனால் இந்த விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்.

அதேபோன்று சனல் 4 – 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட இசைப்பிரியா கொலை உள்ளிட்ட பல்வேறு காணொளிக்கள் தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் அவசியமாகும்.தேசிய மட்டத்தில் நீதி கிடைக்காத காரணத்தினால் தான் நாங்கள் தொடர்ந்து சர்வதேச விசாரணைகளை கோருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.