உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்வத்திற்கு சர்வதேச விசாரணை நடாத்தப்படக்கூடாது என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரை நிகழ்த்திய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதியை இன்று தான் சந்தித்து, ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய கடிதத்திலேயே தான் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், தனிப்பட்ட ரீதியிலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற விதத்திலும் தான் இந்த கடிதத்தை ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியிடம் கையளித்ததாகவும் அவர் கூறினார்.
”சர்வதேச விசாரணை அல்ல தேவைப்படுகின்றது. சர்வதேச விசாரணையொன்று நடாத்தினால், ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை நடாத்தப்பட்டதை போன்று, 30 வருட கால யுத்தத்திற்கு ஏன் சர்வதேச விசாரணை நடாத்தப்படவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது புலம்பெயர் தமிழர்கள் கோரினால், நாட்டின் சுயாதீனத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
அதனால், நாட்டை நேசிக்கும் ஒருவன் என்ற விதத்தில் இந்த கோரிக்கையை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியிடம் கடிதம் மூலம் வழங்கினேன்.
சர்வதேச விசாரணை அல்ல. உயர்நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை நடாத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் கோருகின்றோம்.
சர்வதேச ரீதியில் தொழில்நுட்ப உதவிகளை மாத்திரம் வழங்க வேண்டும். பிரபாகரன் உயிரிழக்கும் போதும் நான் தான் பாதுகாப்பு அமைச்சர். அதனால் எனக்கு நன்கு தெரியும்.
நாட்டில் உள்ள பாதுகாப்பு பிரிவின் பொருட்களை எடுத்துக்கொண்டால், அதிவலுக்கொண்ட தொழில்நுட்ப பொருட்கள் எம்மிடம் கிடையாது.” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.