தென் கொரியா ஜனாதிபதியின் பொருளாதார மீட்பு திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதி

0
198

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இலங்கைக்கான பொருளாதார மீட்சித் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த தென்கொரிய ஜனாதிபதி Yoon Suk-yeol நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியினை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பில் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் இலங்கை இளைஞர்களுக்கு தென் கொரியாவில் தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் தென்கொரிய ஜனாதிபதி Yoon Suk-yeol ஆராய்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (COP27) நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் அவர் பாராட்டியுள்ளார்.

அத்துடன் இரு நாடுகளுக்கு இடையில் இருதரப்பு காலநிலை மாற்ற ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவது தொடர்பில் தென்கொரிய ஜனாதிபதி Yoon Suk-yeol முன்மொழிந்துள்ளார்.

இலங்கைக்கு புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்கு தென் கொரிய முதலீடுகளை எளிதாக்கும் நோக்கில் இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கையை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்.

இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கையை துரிதமாக இறுதி செய்வதன் முக்கியத்துவம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மற்றும் தென் கொரியா இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கு இரு ஜனாதிபதிகளும் முன்னுரிமை அளித்துள்ளதுடன் தென் கொரியாவில் பணிபுரியும் இலங்கை இளைஞர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்புகளுக்கு ஜனாதிபதி Yoon Suk-yeol நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்காலத்தில் தென் கொரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு Yoon Suk-yeol ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.