பயணிகளின் பொதிகளில் திருடும் விமான நிலைய ஊழியர்கள்!

0
76

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் பைகளில் இருந்து பணம் மற்றும் நகைகளைத் திருடும், பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகள் இருவர் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த திருட்டுச் சம்பவம் மியாமி விமான நிலையத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி

விமான நிலையத்தில் பரிசோதனைக்காக, எக்ஸ்ரே இயந்திரத்திற்கு காத்திருக்கும் பயணிகளின் பைகளில் இருந்து, பணம் மற்றும் நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை 2 அதிகாரிகள் திட்டமிட்டு களவாடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

ஜூன் 29 அன்று பதிவான இந்த வீடியோ காட்சி தற்போதுதான் பொதுவெளியை அடைந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட அதிகாரிகள் மீதான விசாரணையை தொடர்ந்து, பணி நீக்க நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளனர்.

எக்ஸ்ரே பரிசோதனைக்கு பயணிகளின் பைகளை வரிசையாக அனுப்பிவைக்கும் சாக்கில், அவற்றில் இருக்கும் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை குறித்த அதிகாரிகள் திட்டமிட்டு திருடி வந்துள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இக் காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து, விமான நிலையங்களின் முறைகேடுகள், களவாடல்கள் தொடர்பாக பயணிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.