ஊதியத்தை உயர்த்த தீர்மானம்: போராட்டத்தை கைவிட்ட Liga F வீராங்கனைகள்

0
204

Liga Fல் பங்குபற்றும் கழகங்களின் வீராங்கனைகளுக்கு ஊதியத்தை அதிகரிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளதால் வீராங்கனைகளின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் கழகங்களுக்கு இடையிலான மகளிர் கால்பந்தாட்ட தொடரான Liga Fல் கடந்த வாரம் ஆரம்பமாகியது. வேலைநிறுத்தம் காரணமாக இந்த தொடரின் முதல் ஏழு போட்டிகளிலும் வீராங்கனைகள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் முதல் ஏழு போட்டிகளும் திட்டமிட்டபடி நடைபெறவில்லை.

கடந்த பருவகாலத்தில் ஆடவர் லீக்கில் ஆண்களுக்கு வழங்கப்பட்ட 182,000 யூரோக்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் லீக்கின் குறைந்தபட்ச சம்பளம் இப்போது வரை 16,000 யூரோக்களே வழங்கப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் மகளிர் கால்பந்து வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஒப்பந்தத்தின் படி மகளிர் கால்பந்தாட்ட லீக்கின் குறைந்தபட்ச ஊதியத்தை இந்த சீசனில் 21,000 யூரோவாக அதிகரிக்கவும் அந்தத் தொகையை 2025 க்குள் 23,500 யூரோவாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை அடுத்து வீராங்கனைகளின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.