2023 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடரில் முக்கிய போட்டிகளை இலங்கையில் நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் அசாத் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கிண்ணத் தொடரில் முக்கியப் போட்டிகளில் ஒன்றான இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டதன் காரணமாகவே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
ஆசியக் கிண்ணத் தொடர் தொடர்பான மோசமான திட்டமிடலுக்கு ஆசிய கிரிக்கெட் பேரவை பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் பருவக்கால மழை ஏற்பட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக முன்னறிவிப்புகள் வெளியான பின்புலத்தில் போட்டிகளை இலங்கையில் நடத்த தீர்மானித்தமை தவறானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தான் நடத்தாத போட்டிகளை துபாயில் நடத்துமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கோரிய போதிலும், அதற்கு பல்வேறு காரணங்களை முன்வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில் ஆசியக் கிண்ணத்தின் ‘சூப்பர் 4’ சுற்றுக்கான இடத்தை மாற்றுவது குறித்து ஆசிய கிரிக்கெட் பேரவை ஆலோசித்துள்ளது.
கொழும்பில் உள்ள நிலைமைகள் குறித்து அணிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பல்லேகல மற்றும் தம்புள்ளை ஆகிய மாற்று தெரிவுகள் பார்க்கப்படுவதாகவும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவரும் ஆசியக் கிண்ண தொடரின் ‘சூப்பர் 4 ‘ சுற்று அடுத்த வாரம் தொடங்குகிறது.
நாட்டின் வறண்ட பிரதேசமாக தம்புள்ளை காணப்படுவதால் இங்கு அடுத்தகட்ட போட்டிகளை நடத்த இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பரிந்துரைத்திருந்தது.
எவ்வாறாயினும், திடீரென இலங்கையில் பருவமழை ஆரம்பித்திருப்பதால் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் நடத்தப்படவுள்ள போட்டிகளை மறுபரிசீலனை செய்ய ஆசிய கிரிக்கெட் பேரவை ஆலோசித்து வருகிறது. இந்த போட்டிகளை தம்புளையில் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.