பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் புதிய வரைவு; இராஜதந்திரிகளுக்கு அரசு விளக்கம்

0
182

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைவு தொடர்பான பணிகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கையில் உள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன உட்பட அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

2022ஆம் ஆண்டு அரசாங்கம் சமர்ப்பித்த புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் சில பிரிவுகள் தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகள் தமது கவலையை வெளிப்படுத்தியதால் குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இந்தச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இராதந்திரிகளுக்கு விளக்கமளித்தார்.

சர்வதேச தரம் மற்றும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றி தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபை  அரசாங்கம் தயாரித்திருந்தாகவும் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள், சிவில் சமூகம் மற்றும் சர்வதேச அமைப்புகள் வெளிப்படுத்திய கருத்துக்களை உள்வாங்கி  புதிய வரைபை உருவாக்க திறந்த ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.

பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் மீதான விவாதங்களைத் தொடர்ந்து, சட்டமூலம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும், அது மீண்டும் வர்த்தமானியாக வெளியிடப்பட்டவுடன், எவரும் உச்ச நீதிமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்த முடியும் என்றும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவையின் தீர்மானத்திற்கு இணங்க, மேலதிக கருத்துக்களைப் பெறுவதற்கு பொதுமக்களுக்கு இந்த விடயம் சென்றடைய நீதி அமைச்சு எடுத்த முயற்சி குறித்து நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ இராஜதந்திரிகளுக்கு இதன்போது விளக்கினார்.

புதிய வரைபில், 2018 ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், ஈஸ்டர் ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்மொழிவுகள் (BASL) மற்றும் ஏனைய அவதானிப்புகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் இந்த சந்திப்பில் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இலங்கை அரசாங்கத்தின் விளக்கத்தை இராஜதந்திரிகள் வரவேற்றுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.