சிங்கப்பூரில் ஒரு தமிழனால் எப்படி அதிபராக முடிந்தது?

0
184

சிங்கப்பூரில் ஒரு தமிழனால் எப்படி அதிபராக முடிந்தது? என்பது தொடர்பில் கருத்தொன்றை ஜீவன் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

“இன – மத வெறியை ஆரம்பத்திலேயே சிங்கப்பூரின் தந்தை லீ குவான்யூ அவர்கள் இல்லாதொழித்து விட்டார். சிங்கப்பூரில் உள்ளவர்களது பூர்வீகம் எதுவாகவும் இருக்கலாம் ஆனால் சிங்கப்பூர் குடியுரிமை கொண்ட அனைவருமே சிங்கப்பூரர்கள் எனும் மன நிலையை அவர் தோற்றுவித்தார்.

இன, மத, சாதி, குல, கோத்திர பேதங்களை பேசி கேடு கெட்ட அரசியல் செய்யும் நிலையை முளையிலேயே அழித்தொழித்தார். எனவே அங்கு வாழ்ந்த அனைவரையும் சிங்கப்பூரர்களாகவே பார்க்கவும் சிந்திக்கவும் வைத்தார்.

சமூக சேவை செய்யக் கூடிய எவராலும் அரசியல் செய்யலாம். ஊழல்வாதிகள் சிறை செல்லலாம் அல்லது சாகலாம். இதுதான் தந்தை லீ அரசியல்வாதிகளுக்கு வைத்த செக். சிங்கப்பூர் என்பது வளமே இல்லாத பூமி. ஆனால் வளமான நாடாக்கி உலகின் முதன்மையான தரத்துக்கு கொண்டு வர செயலாற்றியவர்.

சிங்கை சிற்பி லீ அவர்களேயாகும். அவருக்கு உற்ற நண்பனாக தோள் கொடுத்தவர் ராஜரத்னம் அவர்கள்தான். தமிழரான தர்மன் அதிபராவதற்கு முன்னர் முதன் முதல் அதிபராகும் வாய்ப்பு லீ அவர்களது உற்ற நண்பனான சின்னத்தம்பி ராஜரத்னம் அவர்களுக்கே கிடைத்தது.

அதை ராஜரத்னம் அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் அவர்களோடு ஆரம்ப காலம் முதல் தொழிற் சங்கவாதிகளாக மலேசிய அரசியலில் இருந்து பயணித்த இந்திய வம்சாவளி வந்த (மலையாள) தேவன் நாயர் அவர்களுக்கு வழங்கினார்கள்.

Devan Nair

ராஜரத்னத்துக்கு பதவியை விட லீயின் நட்பே முக்கியமாக இருந்தது. அது கடைசி வரை பழுதுபடாது தொடர்ந்தது. ராஜரத்னம் அவர்களும் சிங்கையை லீயோடு சேர்ந்து உருவாக்கிய ஒரு சிற்பியாகும். ராஜரத்னம் அவர்கள் இலங்கை யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்தவர் என்பது குறிபிடத்தக்கது.

S. Rajaratnam

இந்நிலையில் இன, மத, சாதி, குல, கோத்திரம் பாராத ஒரு பூமியான சிங்கப்பூரின் அதிபராக அனைத்து மக்களின் 70.4 விழுக்காடு வாக்குகளால் ஏகோபித்த அதிபராக தேர்வாகியுள்ள தர்மன் சண்முகரத்னம் அவர்களது வெற்றி சாதனையே!

அவரது பூர்வீகம் எதுவாகவும் இருக்காலம் ஆனால் அவர் சிங்கப்பூரின் பூமி புத்திரர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிங்கப்பூர் சிற்பியான தந்தை லீ அவர்களது பணியை தர்மனும் தொடர வாழ்த்துகிறோம்”. என பதிவு செய்துள்ளார்.