சிங்கப்பூர் அதிபரான தர்மன் சண்முகரத்தினத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

0
216

சிங்கப்பூர் அதிபராக பொறுப்பேற்க உள்ள தமிழர் தர்மன் சண்முகரத்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஸ்டாலின் வாழ்த்து

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சிங்கப்பூர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு வாழ்த்துகள். உங்களின் வெற்றி சிங்கப்பூர் மக்களின் பண்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. உங்களின் தமிழ் பாரம்பரியம் மற்றும் ஈர்க்கக்கூடிய தகுதிகள் எங்களை பெருமைப்படுத்துகிறது” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதோடு ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூறு பாடலின் வரிகளையும் பதிவிட்டுள்ளார். 

சிங்கப்பூர் தேர்தல்

ஆசிய கண்டத்தின் நிதி தலைநகராக சிங்கப்பூர் இருப்பதால் உலக நாடுகள் மத்தியில் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளி தமிழரான தர்மன் சண்முகரத்னம் அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு அதிகளவில் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழரான தர்மன் சண்முகரத்னம் தொடர்ந்து முன்னிலை வகித்த வந்த நிலையில் அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளை பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக தேர்தல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிங்கப்பூரின் அதிபராக பொறுப்பேற்க உள்ள மூன்றாவது இந்தியரான தர்மருக்கு சர்வதேச தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்

ஏற்கனவே, இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பேர் சிங்கப்பூருக்கு அதிபராக பதவி வகித்துள்ளனர். எஸ்.ஆர். நாதன் என அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன், 2009ஆம் ஆண்டு, பெஞ்சமின் ஷீரஸை தோற்கடித்து அதிபராக தேர்வானார். சிங்கப்பூரின் நீண்ட கால அதிபர் என்ற பெருமை இவரையே சாரும். தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இவர் அரசு ஊழியராக பணியாற்றியுள்ளார். 

சிங்கப்பூரின் மூன்றாவது அதிபரான தேவன் நாயர் 1981 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தார். 1923 இல் மலேசியாவின் மலாக்காவில் பிறந்த இவர் கேரள மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்த ஒரு ரப்பர் தோட்ட எழுத்தரின் மகனாவார். இவரின் உண்மையான பெயர் செங்கரா வீட்டில் தேவன் நாயர். சிங்கப்பூரில் பல இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள மக்கள் தொகையில் சுமார் 75 சதவிகிதத்தினர் சீன மக்கள். 13.5 சதவிகிதத்தினர் மலாய் இனத்தவர். 9 சதவிகிதத்தினர் இந்தியர்கள் ஆவர்.