யாழில் பெண்களின் ஆடைகளை அணிந்து கொண்டு கொள்ளையிட்ட கும்பல் கைது; டென்மார்க்கில் உள்ள நபரை கைது செய்ய நடவடிக்கை

0
170

யாழ் மாவட்டத்தில் பெண்களின் ஆடைகளை அணிந்தவாறு வீடுகளுக்குள் புகுந்த கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நபர்களை கொலை செய்ய எத்தணித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 9 பேரும் சனிக்கிழமை (19) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்குள் புகுந்த கும்பல்

யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் கீரிமலை பிரதேசங்களில் இரவு வேளையில் கும்பல் ஒன்று வீடுகளுக்குள் புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் தாக்குதல்களை நடத்தியும் பெறுமதியான பொருள்களை சேதமாக்கியும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தது.

யாழில் பெண்களின் ஆடைகளை அணிந்து கொள்ளையிட்ட கும்பல் | Gang Robbed By Wearing Women S Clothes In Jaffna

அண்மையில் கோப்பாய் வன்முறைக் கும்பலைச் சேர்ந்தோர் சல்வார் ஆடையை அணிந்த வாறு தாக்குதலில் ஈடுபட்டமை சிசிரிவி கமரா பதிவில் வெளிப்பட்டது.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள்

சந்தேக நபர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 2 வாள்கள், கைக்கோடரி ஒன்றும் மடத்தல் ஒன்றும் தாக்குதல்களுக்கு அணிந்து சென்ற பெண்கள் ஆடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு மீதான தாக்குதலுக்கு டென்மார்க்கில் வசிக்கும் விஸ்வநாதன் என்பவரே காரணம் என்றும் அவர் தமக்கு பணம் அனுப்பியதாகவும் முதன்மை சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

மேலும், கல்வியங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களின் சூத்திரதாரியாக காணப்படும் பிரதான சந்தேக நபரான டென்மார்க்கில் உள்ள விஸ்வநாதன் என்பவரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்யவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி கல்வியங்காடு பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீது 2 மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வருகை தந்த 6 பேர் சேதம் விளைவித்திருந்தனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிள், மாணவர்களின் புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதுடன், ஜன்னல் கண்ணாடிகளும் சிசிரிவி கமராக்களும் சேதமாக்கப்பட்டிருந்ததுடன் குறித்த குழுவில் 3 பெண்களின் ஆடைகளை அணிந்து வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.