பெருந்தோட்ட மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்: சச்சின் டெண்டுல்கர்

0
269

குழந்தைகள் தங்களின் முழுமையான திறனை அடைய ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் தரமான கல்வி தேவை என யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதுவர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குழந்தைகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்தில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான தனது விஜயம் குறித்து கொழும்பில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சச்சின் டெண்டுல்கர் இந்த விடயங்களை வலியுறுத்தியிருந்தார்.

“தனது விஜயத்தின் போது சில மாணவர்களுடன் கலந்துரையாட முடிந்தது. அவர்கள் மிகுந்த மன உறுதியுடன் இருப்பதுடன் மிகுந்த விடாமுயற்சியைக் வெளிப்படுத்தினர்.

மேலும் சிறந்த எதிர்காலத்திற்கான அவர்களின் நம்பிக்கை வலுவாக உள்ளது. நாங்கள் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். அதனால் தொடர்ந்து தங்கள் இலக்குகளை அடைவார்கள்” என்று சச்சின் மேலும் கூறினார்.

சவாலான சூழ்நிலையில் நாட்டில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் முயற்சிகளையும் நான் பாராட்டுகின்றேன்.

“குழந்தைகள் தங்கள் முழு திறனை அடைய ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் தரமான கல்வி தேவையாகின்றது. அவர்களின் கல்வி மற்றும் ஊட்டச்சத்தின் முதலீடு செய்வது அவசியமாகின்றது.

அந்த முதலீடு குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மட்டுமல்ல, அது ஒவ்வொரு நாட்டின் எதிர்காலத்திற்கான முதலீடாகும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கல்வி மிக முக்கியமான ஒன்றாகும். இது அனைத்து குழந்தைகளின் வாழ்க்கைக்கும் அத்தியாவசியமாகின்றது. கொவிட் தொற்றுக்கு பின்னர் நாம் பெரும் சவால்களை எதிர்நோக்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யுனிசெஃப் தெற்காசிய பிராந்திய நல்லெண்ண தூதுவரான கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு நேற்றைய தினம் விஜயம் செய்திருந்தார்.

இதன்போது சப்ரகமுவ மாகாணத்தில் யுனிசெஃப் நிகழ்ச்சிகளுக்காகச் சென்ற சச்சின், கோவிட் தொற்று மற்றும் 2022 பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்களைச் சந்தித்தார்.

சச்சின் தனது முந்தைய பயணங்களின் போது, ​​கிரிக்கெட் வீரராகவும், 2015 ஆம் ஆண்டு யுனிசெஃப் உடனான தனது ஈடுபாட்டின் ஒரு பகுதியாகவும், இலங்கையுடன் தொடர்புடைய இனிமையான நினைவுகளை இன்றைய செய்தியாளர் சந்திப்பில் நினைவு கூர்ந்தார்.

தனது விஜயத்தின் போது பெருந்தோட்டங்களில் வசிக்கும் குடும்பங்களைச் சந்திக்க முடிந்ததாகவும் அவர்கள் தங்களின் பிள்ளைகளை வளர்க்க மிகவும் சிரமப்படுவதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தனக்கு மிகச் சிறந்த நண்பர்கள் இருப்பதாக தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், செய்தியாளர் சந்திப்பை ஆயுபோவன் என சிங்களத்தில் வணக்கம் கூறி ஆரம்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர் 2013 ஆம் ஆண்டு தெற்காசியாவிற்கான முதல் யுனிசெஃப் பிராந்திய நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர், தெற்காசியாவில் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்து வருகிறார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்: